எண்ணெய் வளமிக்க மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில், கார்களுக்கு பயன்படுத்தப்படும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு எரிபொருளின் விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து, கடந்த ஞாயிற்று கிழமை போராட்டம் வெடித்தது. நாடு முழுவதும் பரவிய இந்த போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.
இந்த வன்முறையில் 1000 பேர் காயமடைந்துள்ளதாகவும், 400 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 62 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் கஜகஸ்தானின் பெரிய நகரமான அல்மாட்டியில் 12க்கும் மேற்பட்ட கலவரக்காரர்களை கொன்றுள்ளதாக அந்தநாட்டு பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன. அதேநேரத்தில் கலவரத்தில் 12 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 353 பேர் காயமடைந்துள்ளனர்.
கஜகஸ்தான் அரசு கூண்டோடு ராஜினாமா செய்தபிறகும் தொடர்ந்து கொண்டிருக்கும் வன்முறை காரணமாக, அந்தநாட்டின் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ், நாடு முழுவதும் ஜனவரி 19 ஆம் தேதி வரை அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். மேலும் அந்தநாட்டில் இணைய சேவைகள் முடக்கப்பட்டு, குறுஞ்செய்தி செயலிகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வன்முறையில் வெளிநாடுகளில் பயிற்சிபெற்ற பயங்கரவாத குழுக்கள் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளதாகவும், கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பைக் கைப்பற்றுகிறார்கள், மிக முக்கியமாக, சிறிய ஆயுதங்கள் இருக்கும் வளாகங்களைக் கைப்பற்றுகிறார்கள் எனவும் தெரிவித்த அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ், இந்த தீவிரவாத அச்சுறுத்துதலை முறியடிக்க உதவுமாறு ரஷ்யா, பெலாரஸ், ஆர்மீனியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் இராணுவ கூட்டமைப்பான கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதனைத்தொடர்ந்து கஜகஸ்தானில் அமைதியை நிலைநாட்ட படைகளை அனுப்ப கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு முடிவு செய்தது. அதனைத்தொடர்ந்து ரஷ்ய வீரர்கள் கஜகஸ்தானில் களமிறங்கியுள்ளனர். இதன்தொடர்ச்சியாக பெலாரஸ், ஆர்மீனியா, கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் படை வீரர்களும் கஜகஸ்தானுக்கு விரைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா, பெலாரஸ், ஆர்மீனியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகியவை முன்னர் சோவியத் யூனியனாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.