Skip to main content

நன்கொடை பெற்றதில் முறைகேடு- கைதாகும் இம்ரான் கான்?

Published on 08/10/2022 | Edited on 08/10/2022

 

Irregularity in receiving donations- Is Imran Khan arrested?

 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி இம்ரான்கானின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டது. தற்போது ஷபாஸ் ஷெரீப் பிரதமராக பதவி வகிக்கிறார். அவருக்கு எதிராக பொதுக்கூட்டங்களை நடத்திவரும் இம்ரான்கான், உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.

 

இந்நிலையில், கடந்த மாதம் 20ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரு பெண் நீதிபதியையும், போலீஸ் துறையையும் மிரட்டியதாக அவர் மீது இஸ்லாமாபாத் மாஜிஸ்திரேட்டு அலி ஜாவத் புகார் செய்தார். இதையடுத்து, அவர் மீது பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல் வெளிநாட்டிலிருந்து முறைகேடாக நன்கொடை வாங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. கட்சிக்கு நிதி திரட்டியதில் முறைகேடாக செயல்பட்டதாக இம்ரான் கான் மீது வழக்குப்பதிவு செய்ய பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பேரணிக்கு தயாராகுமாறு அவரது கட்சியினருக்கு இம்ரான் அழைப்பு விடுத்துள்ளார். ஒருவேளை இம்ரான்கான் பேரணியில் கலந்து கொண்டால் அவர் கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முறைகேடாக நிதி திரட்டியது தொடர்பாக ஏற்கனவே இம்ரான் கானின் கட்சி நிர்வாகிகள் மூன்று பேர் நேற்று கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்