Skip to main content

ஜப்பான் நிலநடுக்கம்; அதிகரிக்கும் உயிர்ப் பலி

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Increasing casualties at Japan Earthquake

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் நேற்று (01-01-24) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் ஹோன்சு பகுதி அருகே அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், வீடுகள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்தது. 3 மணி நேரத்தில் 30 முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

ஹோன்சு அருகே 13 கி.மீ ஆழத்தை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அடுத்து சுனாமி எச்சரிக்கை அந்நாட்டுக்கு விடுக்கப்பட்டிருந்தது. அதில், டோயாமா, இஷிகவா, நிகாடா, ஹையோகா ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த சுனாமியானது, சுமார் 5 மீட்டர் உயரத்துக்குத் தாக்கக்கூடும் என்றும் கூறியிருந்த நிலையில், 1 முதல் 5 மீட்டர் அளவுக்கு சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவான நிலையில், சுனாமி அலைகள் தாக்கியதால் கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்குள்ள 36,000 வீடுகளில் உள்ள மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், பல்வேறு நகரங்களில் பாதுகாப்பு கருதி ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. நிலநடுக்கம், சுனாமி அலைகள் தாக்கியதைத் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களுக்கு மக்களைப் பாதுகாப்பதற்காக மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மத்திய ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யாவிலும், வடகொரியாவிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும், நிலநடுக்கம் மற்றும் சுனாமி குறித்த தகவல்களை மக்கள் அறிந்து கொள்வதற்காக அவசர கால மையம் ஏற்பாடு செய்யப்பட்டது. 

புத்தாண்டு தினத்தில் ஜப்பானை உலுக்கிய இந்த பயங்கர நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமி அலைகளால் 2 பேர் பலியானதாகவும், 30 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், நிலநடுக்கம் காரணமாக இன்று (02-01-24) காலை வரை 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரே நாளில் மட்டும் 155 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றன. 

சார்ந்த செய்திகள்