தங்களுக்கு குழந்தை வேண்டுமென்ற ஆசையுடன் கருவள சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்ற தம்பதி, சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் தங்களுக்கு சம்மந்தமே இல்லாத இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ளனர்.
கலிஃபோர்னியாவிலுள்ள ஒரு கருவள சிகிச்சை மையத்தில் ஒரு ஆசிய தம்பதியினர் சிகிச்சை பெற்றுவந்தனர் (விவரங்கள் குறிப்பிடப்படவில்லை). அங்கு நடந்த குழப்பத்தால், அந்த தம்பதியினருக்கு ஆசிய வம்சாவளிக்கு சம்பந்தமில்லாத இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் நியூயார்க்கில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்துள்ளனர். குழந்தைகளின் டி.என்.ஏ., அந்த தம்பதியினரின் டி.என்.ஏ.வோடு ஒத்துப்போகவில்லை என்பது இந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்தரிப்பு முந்தைய சிகிச்சை, ஆய்வக செலவுகள், ஐ.வி.எஃப். செலவு, பயணச்செலவு உட்பட இன்னும் பிற செலவுகள் ஆகியவற்றை சேர்த்தால் மொத்தம் ஒரு இலட்சம் டாலருக்கும் மேலாகும் என தெரிவித்துள்ளனர். இது இந்திய மதிப்பில் கிட்டதட்ட 70 இலட்சம் ஆகும்.
ஐ.வி.எஃப். என்றால் ஆய்வகத்தில் பெண்ணின் கருமுட்டையை கருத்தரிக்க செய்து, பின் அதை அந்தப் பெண்ணின் கருப்பையில் வைத்து குழந்தையை வளர்ப்பதாகும். குழந்தை பிறந்தவுடன் குழந்தைகளை பார்த்த தம்பதியினர் ஆசியாவின் அடையாளங்கள் எதுவுமில்லாததால் அதிர்ச்சியடைந்து புகாரளித்துள்ளனர். மேலும் அவர்கள் பெண் குழந்தையைப் பெற விரும்பியதால் ஆண் கருவை அகற்றுமாறு கூறியிருந்தனர். மருத்துவரும் ஆண் கருவை அகற்றியிருப்பதாக கூறியுள்ளனர். ஆனால் தற்போது அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றெடுத்துள்ளனர். மேலும் அந்த இரு குழந்தைகளுக்கும் இடையேயும் எந்த வித தொடர்புமில்லாமல் இருக்கின்றன எனபதையும் வழக்கில் பதிவு செய்துள்ளனர்.