பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு எலான் மஸ்க் வாங்கியுள்ளார். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனரும், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவருமான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் உள்ளதாக நீண்ட நாட்களாக கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு எலான் மஸ்கிடம் ஒப்படைக்க ட்விட்டர் நிர்வாகக்குழு ஒப்புதல் வழங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஊழியர்கள் கூட்டத்தில் பேசிய ட்விட்டர் சி.இ.ஓ பராக் அகர்வால், "ட்விட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது. ட்விட்டர் கைமாறும் நிலையில் உள்ளதால் அது எந்தத் திசையில் செல்லும் என எங்களுக்குத் தெரியாது" எனத் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இந்தியர் பராக் அகர்வால் பதவி வகித்துவரும் நிலையில், எலான் மஸ்குடனான ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு அந்த நிறுவனத்தை யார் வழிநடத்துவார் என்பது டெக் உலகில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
ட்விட்டர் ஊழியர்களுடன் கேள்வி, பதில் அமர்வில் எலான் மஸ்க் பங்கேற்க உள்ளதாக புதிய தகவல் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.