ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றியுள்ளதையடுத்து அங்குள்ள தங்கள் குடிமக்களை அழைத்து வர அமெரிக்க தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை அந்தநாடு ஆப்கானில் குவித்து வருகிறது.
இருப்பினும் அமெரிக்கர்களை மீட்கும் பணிகளை வேகப்படுத்துவதில் அமெரிக்கா சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்தநிலையில் குழப்பமின்றி அமெரிக்க படைகளை இப்படி திரும்ப பெற்றிருக்கலாம் என அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆப்கான் விவகாரத்தில் ஜோ பைடனை தொடர்ந்து விமர்சித்து வரும் டொனால்ட் ட்ரம்ப் தனது அறிக்கையில், "முதலில் நீங்கள் அனைத்து அமெரிக்க குடிமக்களையும் திரும்ப அழைத்து வந்திருக்க வேண்டும். பின்பு அனைத்து உபகரணங்களையும் கொண்டு வந்திருக்க வேண்டும். பின்பு படைகள் தங்கியிருந்த தளங்களை வெடிகுண்டுகள் மூலம் சுக்குநூறாக்கியிருக்க வேண்டும். பின்பு ராணுவத்தை திரும்ப பெற்றிருக்க வேண்டும். ஜோ பைடன் மற்றும் நமது தூங்கி எழுந்த ஜெனரல்களை போல் தலைகீழாக செய்திருக்க கூடாது. குழப்பம் இருந்திருக்காது. மரணங்கள் ஏற்பட்டிருக்காது. நாம் வெளியேறியது கூட அவர்களுக்கு தெரிந்திருக்காது" என கூறியுள்ளார்.
இது தற்போது சமூகவலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. வீரர்ககள் தங்கியிருக்கும் தளங்களை வெடிகுண்டுகளை வைத்து தகர்த்து விட்டால், அவர்கள் நாடு திரும்பும் வரை எங்கு தங்குவார்கள் எனவும், தளங்களை வெடிகுண்டு வைத்து தகர்த்தால் அது யாருக்கும் தெரியதா என பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.