கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்வதால் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியே நீரில் மிதக்கிறது. இந்த கடும் வெள்ளம் காரணமாக சாலைகள் அரிக்கப்பட்டு, மின்சார வசதி துண்டிக்கப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
மேலும் வன உயிர்கள் அதிகம் உள்ள ஆஸ்திரேலியாவில் இந்த வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான விலங்குகள் இறந்திருக்கக்கூடும் என கணிக்கப்படுகிறது. மேலும் சில பகுதிகளில் ஆற்றில் இருந்த முதலைகள் சாலையில் தேங்கியுள்ள நீரில் நீந்தி செல்வதால் மக்கள் வெளியேறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இதுவரை 20 ஆயிரம் வீடுகளுக்கும் மேலாக வெள்ள நீர் சூழ்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 506 மிமி மழை பெய்துள்ளது. மேலும் சில நாட்களாக மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மக்களை மீட்கும் பணியில் அந்நாட்டு ராணுவம் தற்போது ஈடுபட்டுள்ளது.