அமெரிக்காவில் கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளார்.
அதே வேளையில், தனது தேர்தல் பிரச்சாரங்களுக்கு பெரும் நிதி தேவைப்படுவதால், பல முன்னணி தொழிலதிபர்களை, டொனால்ட் டிரம்ப் சந்தித்து நிதியுதவி கோரி வந்தார். அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்தவரும், உலகின் பெரும் பணக்காரருமான டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்கை டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தேர்தலில் யார் பக்கமும் இல்லாமல் நடுநிலை வகிக்கப் போவதாக எலான் மஸ்க் திட்டவட்டமாக கூறியிருந்தார். இருப்பினும் எலான் மஸ்க், டொனால்டு டிரம்பிற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி தெரிவித்து வந்தன.
இந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த டிரம்ப் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. டிரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, எலான் மஸ்க் டொனால்டு டிரம்பிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார்.
டிரம்பின் தேர்தல் செலவுகளுக்காக நிதி திரட்டி வரும், ‘கிரேட் அமெரிக்கா பிஏசி’ என்ற அரசியல் அமைப்புக்கு 45 மில்லியன் டாலர் (ரூ.376 கோடி) வழங்க எலான் மஸ்க் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன. மேலும், இந்தத் தொகையைத் தேர்தல் முடியும் வரை மாதந்தோறும் வழங்க அவர் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், எலான் மஸ்க் தரப்பில் இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.