உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம்.
அந்தவகையில் 2023ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் இன்று காலை அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஆஸ்கர் விருதுகளில் சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருதை குஹ்லிர்மொ டில் டோரோஸ் பினோஷியோ ( Guillermo del Toro's Pinocchio) வென்றது.
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான (Best Makeup and Hairstyling) ஆஸ்கர் விருதை தி வேல் (The Whale) படத்திற்காக அட்ரின் மொரொட், ஜூடி சின், அனிமேரி பிராட்லி வென்றனர்.
சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' படத்திற்காக ஜேமி லீ குருஷ்டீஸ் வென்றார்.
சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான ஆஸ்கர் விருதை ‘பிளாக் பேந்தர்ஸ்: வகாண்டா பார்எவர்’ (Black Panther: Wakanda Forever) படத்திற்காக ரூத் கார்டர் வென்றார்.
சிறந்த ஒளிப்பதிவுக்கான (Best Cinematography) ஆஸ்கர் விருதை ‘ஆல் குயைட் ஆன் தி வெஸ்ட்டர்ன் பாண்ட்’ (All Quiet on the Western Front) படத்திற்காக ஜேம்ஸ் பிரண்ட் வென்றார்.
இந்நிலையில், சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை இந்தியாவின் தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ் (The Elephant Whisperers) வென்றுள்ளது. தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ் குறும்படம், தமிழ்நாட்டின் முதுமலையில் இரு யானைக்குட்டிகளைப் பராமரிக்கும் முதுமலை பாகன் தம்பதி குறித்த ஆவணப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் இசை அமைப்பாளர் கீரவாணி இசையில் உருவான ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பாடப்பட்டது. இந்தப் பாட்டிற்கு கலைஞர்கள் நடனமாடினர். இந்தப் பாடலை பாடகர்கள் ராகுல் சிப்லிகுஞ்ச் மற்றும் கால பைரவா ஆகியோர் ஆஸ்கர் மேடையில் பாடினர். நாட்டு நாட்டு பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.