![tesla](http://image.nakkheeran.in/cdn/farfuture/Bv7aPRzhcrftIOYhPzezVsi2uxoo3SHGEOpHrZwZzkk/1598085253/sites/default/files/inline-images/tesla-car-final.jpg)
நீண்ட நேரமாக மூடப்பட்டுள்ள காருக்குள் குழந்தைகள் இருக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் உலகம் முழுவதும் அடிக்கடி நடக்கின்றன. இதனைத் தடுக்கும் வகையில் டெஸ்லா கார் நிறுவனம் புது முயற்சியில் இறங்கியுள்ளது.
கார் பயன்பாடு என்பது இன்று சாலைப்போக்குவரத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. கடந்த பத்தாண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏற்பட்ட அதிரடி மாற்றத்தின் காரணமாக, நடுத்தர மக்கள் வசதிக்கு ஏற்ப மலிவு விலைகளிலேயே கார்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. இதனால் கணிசமான மக்கள் பொதுப்போக்குவரத்தை விட இது போன்ற வசதியான தனிப்போக்குவரத்தையே விரும்புகின்றன. இதனால் சாலைகளெங்கும் கார்கள் அணிவகுத்து செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. கார் நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களின் பயண பாதுகாப்பை உறுதி செய்வதில் மிகவும் மெனக்கெடுகின்றன. அதன் படி 'ஏர் பேக்' போன்ற வசதிகள் இன்று விலை குறைவான கார்களிலேயே கிடைக்கின்றன். இந்நிலையில் டெஸ்லா நிறுவனம் மூச்சுத்திணறல் காரணமாக ஏற்படும் குழந்தை மரணங்களைத் தடுக்க புது தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நீண்ட நேரமாக குழந்தைகள் மூடிய காரினுள் இருக்கும் போது இதுபோன்ற மரணங்கள் நிகழ்வதாக சொல்லப்படுகிறது. எனவே குழந்தைகள் மூடிய மற்றும் வெப்பநிலை அதிகமுள்ள காரினுள் நீண்ட நேரமாக இருக்கும்போது அதைத் தெரிவிக்கும் வகையில் சென்சார் உருவாக்கப்பட்டுள்ளது. இது உருவம், எடை உள்ளிட்ட விஷயங்களை அடிப்படையாக வைத்து குழந்தைகளையும், பொருட்களையும் வேறுபடுத்தி செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கோரி டெஸ்லா நிறுவனம் 'Federal communications commission'-னிடம் விண்ணப்பித்துள்ளது. இவ்வமைப்பும் இந்த கோரிக்கையை ஏற்று பொதுமக்களிடம் கருத்து கேட்க இருக்கிறது. மக்கள் ஆதரவு இருக்கும் பட்சத்தில் இந்த தொழில்நுட்பத்தை விரைவில் டெஸ்லா நிறுவன கார்களில் எதிர்பார்க்கலாம்.