அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்காவின் புதிய குடியுரிமை கொள்கைகளை நேற்று வெள்ளை மாளிகையில் வெளியிட்டார்.
அதன்படி அகதிகள் எண்ணிக்கையை குறைக்கவும், திறமையின் அடிப்படையில் அதிக பேருக்கு குடியுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்கையின்படி, நிரந்தர அமெரிக்க குடியுரிமை வழங்கப்படுவோரின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லையெனினும், கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள், உயர் படிப்பை முடித்தவர்கள், தொழில் நிபுணர்கள் ஆகியோருக்கே இனி அதிக முன்னுரிமை வழங்கப்படும் என டிரம்ப் அறிவித்தார்.
அதன்படி ஆங்கில மொழியில் நல்ல திறன், வேலைவாய்ப்பு ஆகியவையும் கவனத்தில் கொள்ளப்படும் என்றும், ஏற்கனவே ஒருவரின் உறவினர் அமெரிக்காவில் வசித்து வந்தால், புதிதாக வருபவருக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதில் பின்னடைவாக கருதப்படும் என கூறினார்.
கல்வி, ஆங்கில புலமை உள்ளிட்ட தகுதிகளை கொண்டு 12 சதவீதம் பேருக்கு மட்டுமே இதுவரை குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இனி தகுதி அடிப்படையில் தான் 57 சதவீத குடியுரிமை தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உறவினர்கள் ஏற்கனவே அமெரிக்காவில் இருப்பவர்கள், குறைந்த கல்வி தகுதி உடையவர்கள் அமெரிக்காவில் குடியுரிமை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அதிக அளவில் இவ்வாறு குடியுரிமை பெற்று குடியேறுபவர்களில் இந்தியர்களும், சீனர்களும் முன்னிலையில் இருப்பதால், இந்த புதிய கொள்கையால் இந்த இரண்டு நாட்டினரும் அதிக அளவில் பாதிக்கப்படுவர் என கணிக்கப்படுகிறது.