2019ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் இருந்து 250க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் உலகம் முழுவதம் சிறையில் அடைக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை குறைந்தது 255 ஆக இருந்துள்ளது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான அறிக்கையில், 2019ஆம் ஆண்டில் அதிகபட்சமாக சீனா 48 பத்திரிகையாளர்களை சிறையில் தள்ளியுள்ளது எனக் கூறப்படுகிறது. இதற்கு அடுத்த இடத்தில் உள்ள துருக்கி 47 பத்திரிகையாளர்களை சிறைக்கு அனுப்பியுள்ளது. ஆனால், முந்தைய ஆண்டைவிட இது குறைவு. 2018இல் துருக்கியில் 68 பத்திரிகையாளர்கள் சிறைக்குச் சென்றார்கள்.
சவுதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளில் தலா 26 பேரும் எரித்ரியாவில் 16 பேரும் வியட்நாமில் 12 பேரும் ஈரானில் 11 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மத்திய கிழக்கு நாடுகளில் சர்வாதிகாரம், நிலையற்ற தன்மை, போராட்டங்கள் ஆகியவை அதிகரித்துள்ளன எனவும் இவற்றால் கைதான பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் அரசால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்களைப் பற்றியது மட்டுமே. பயங்கரவாத அமைப்புகள் போன்ற பிறரால் கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய விவரம் இதில் இடம்பெறவில்லை.