சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தங்க சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 30 தொழிலாளர்கள் பலியான சம்பவம் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சாத் நாட்டில் நடந்துள்ளது.
சாத் நாட்டின் மத்திய பகுதியில் லிபியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ளது டிபெஸ்டி பகுதியில் அதிக அளவில் தங்கம் கிடைப்பதால், அப்பகுதியை சேர்ந்த பலர் சட்டவிரோதமாக சுரங்கங்கள் அமைத்து தங்கம் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சுரங்கம் ஒன்றில் பணியாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக சுரங்கம் சரிந்து விழுந்துள்ளது. இதில் சுரங்கத்தில் பணியாற்றிய அனைவரும் உள்ளேயே சிக்கினர். தகவல் அறிந்து சென்ற மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் 30 பேரை பிணமாகத்தான் மீட்கமுடிந்தது. இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என கூறப்படும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.