கனடாவில் நேற்று (20.09.2021) பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அமைதியாக நடைபெற்ற வாக்குப்பதிவு, இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி முன்னலையில் இருந்துவந்தது. 338 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்ற நிலையில், தற்போதுவரை ஜஸ்டினின் லிபரல் கட்சி 148 இடங்களிலும், கன்சர்வேட்டிவ் கட்சி 103 இடங்களிலும் பிளாக் கியூபெகோயில் 22 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றது. பெரும்பான்மைக்கு 170 இடங்கள் தேவைப்படும் நிலையில், தற்போதுவரை யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில், சிறிய கட்சிகளின் கூட்டணியோடு மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளார். தனது பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில் ராஜினாமா செய்த அவர், தற்போது மீண்டும் ஆட்சியில் அமர உள்ளார். இந்திய மக்களின் மீது தனி பாசம் கொண்டவர் என்ற அடிப்படையில், அவரது வெற்றியை பெரும்பாலான இந்தியர்கள் சமூக வலைதளங்களில் வரவேற்று வருகிறார்கள்.