அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பாஜகவின் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்காவில் வசிக்கும் பாஜக தொண்டர்களை அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. அமெரிக்காவின் குடியரசு கட்சிக்கும், ஜனநாயக கட்சிக்கும் இடையே அதிகாரத்தைப் பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜோ பைடன் போட்டியிட இருக்கிறார். இதில், இரண்டு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகளைப் பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அந்தவகையில், பிரதமர் மோடியும், ட்ரம்ப்பும் இந்தியா மற்றும் அமெரிக்காவில் சந்தித்துக்கொண்ட நிகழ்வுகளின் படங்களைப் பயன்படுத்தி குடியரசுக்கட்சி பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பாஜகவின் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்காவில் வசிக்கும் பாஜக தொண்டர்களை அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பாஜகவின் வெளிநாட்டு உறவுகள் துறைத் தலைவர் விஜய் சவுதைவாலே அளித்துள்ள பேட்டியில், "எந்த தேர்தல் நடைமுறையும் ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரம் ஆகும். அதில் எந்த வகையிலும் பாஜகவின் பங்களிப்பு இல்லை. பாஜகவின் அமெரிக்க தொண்டர்கள் ஜனாதிபதி தேர்தலில் எந்த கட்சியையோ அல்லது நபரையோ ஆதரித்து நடைபெறும் பிரசாரங்களில் தனிப்பட்ட முறையில் பங்கேற்கலாம். ஆனால் பாஜகவையோ அல்லது கட்சியின் வெளிநாட்டுப் பிரிவின் பெயரையோ பயன்படுத்த வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.