ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டதன் காரணமாக அமெரிக்கா ஈரான் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இந்த சூழலில் ஈராக் நாட்டு தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் உள்ள அல் ஆசாத், இர்பில் விமானப்படை தளங்கள் மீது 10- க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவும் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியது. இந்நிலையில் இந்த தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து ஈரான் மதத்தலைவரான அயத்துல்லா அலி காமெனி ஈரான் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "சுலைமான் துணிச்சலான ராணுவ வீரர். அமெரிக்கர்களுக்கு எதிராகப் பாலஸ்தீன மக்களுக்கு உதவியவர். சுலைமான் கொல்லப்பட்டதன் மூலம் நம்முடைய புரட்சி மீண்டும் புத்துயிர் பெற்று இன்று உலகிற்கு வெளிக்காட்டபட்டுள்ளது. நம்முடைய எதிர்ப்பு தொடர்ந்து உயிர்ப்புடன்தான் இருந்து வருகிறது. நேற்று இரவு அமெரிக்காவின் முகத்தில் நாம் அறைந்துள்ளோம். நம்முடைய பிராந்தியத்தையே அழித்துவிட்டு அமெரிக்கா தற்போது பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது. சுலைமான் கொல்லப்பட்டதற்குப் பழிதீர்க்க ராணுவ நடவடிக்கை மட்டும் போதாது" என தெரிவித்துள்ளார்.