வங்காளதேசத்தின் தலை நகர் டாக்காவின் அருகில் உள்ள மிர்பூரில் சலந்திகா என்னும் இடத்தில் ஒன்றோடு ஒன்று ஒட்டியவாறு இருந்த 15000 வீடுகள் ஒரேநாள் இரவில் எரிந்து சாம்பலாகியுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அப்பகுதியில் இருந்த குடிசை ஒன்றில் தீப்பிடித்துள்ளது. அந்த தீ மளமளவென அருகில் உள்ள வீடுகளுக்கு பரவ ஆரம்பித்தது. பல வீடுகளில் பிளாஸ்டிக் மேற்கூரைகள் அமைக்கப்பட்டிருந்ததால், தீ வேகமாக அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவியது. தீப்பற்றி எரிவதை அறிந்ததும் வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்தபடி தெருக்களுக்கு வந்தனர், பின்னர் தங்கள் வீடுகளில் இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் தீ கட்டுக்கடங்காமல் எரிய ஆரம்பித்த நிலையில், அங்கிருந்த 15,000 வீடுகளுக்கும் பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், சுமார் 6 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கோர சம்பவத்தில் சுமார் 15 ஆயிரம் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின. இதனால் 50 ஆயிரம் பேர் வீடு மற்றும் உடைமைகளை இழந்து நிற்கதியாகி இருக்கிறார்கள்.