அமெரிக்காவில் க்ரீன் கார்ட் வழங்குவது தொடர்பான விதிகளில் அந்நாட்டு அரசு புதிய திருத்தங்களை செய்துள்ளது.
வெளிநாட்டை சேர்ந்த பலரும் தங்கள் நாட்டிற்கு வந்து பணிபுரிவதால், அமெரிக்க இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகிறது என கூறி கடந்த சில ஆண்டுகளாக விசா வழங்குவதில் பல கடும் விதிமுறைகளை அமல்படுத்தி வந்தது அமெரிக்கா.
இந்நிலையில் விசா வழங்கும் முறையில் மாற்றங்கள் செய்யப்படாவிட்டாலும், க்ரீன் கார்ட் வழங்கும் விதிமுறைகளை தற்போது தளர்த்தியுள்ளது அமெரிக்க அரசு. அதன்படி ஒவ்வொரு நாட்டுக்கும், வேலை தொடர்பாக குடியேற அந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட விசாவில் 7 சதவீத அளவுள்ள மக்களுக்கு மட்டுமே அமெரிக்க அரசு கிரீன் கார்ட் வழங்கி வந்தது. தற்போது அந்த வரம்பை முழுவதுமாக நீக்கியுள்ளது. இது மட்டுமல்லாமல் குடும்பம் சார்ந்து குடியேறுவதற்கு 7 சதவீதமாக இருந்த இந்த வரம்பை தற்போது 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
இதனால் வேலை வாய்புக்காக அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள். வேலைக்காக செல்லும் திருமணமாகாத இளைஞர்கள் இனி அமெரிக்க க்ரீன் கார்ட் வாங்குவது எளிதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஹெச்ஆர் 1044’ என்ற இந்த மசோதா அந்நாட்டு நாடளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. 435 உறுப்பினர்களில் 365 உறுப்பினர்கள் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
இதுவரை அமெரிக்காவில் பணிபுரிந்துவந்த இந்தியர்களில் 25 சதவீத பேருக்கு மட்டுமே குடியுரிமை கிடைத்த நிலையில், இனி 90 சதவீத இந்தியர்களுக்கு குடியுரிமை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.