போர்முனைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள், சொந்த நாடுகளில் வாழ முடியாத சூழலில் உயிரைப் பணயம் வைத்து வேறு நாடுகளுக்குச் சென்று அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் இலங்கை, ஈரான் போன்ற நாடுகளில் இருந்து மக்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து பல்லாயிரக்கணக்கான கி.மீ கடந்து கடல் வழியாகச் சிறிய ரக கப்பலில் ஆபத்தான முறைகளில் பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியா வந்துள்ளனர். அப்படி அகதிகளாக வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த 10, 12 ஆண்டுகளாக நிரந்தர விசா கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தற்காலிக விசா கிடைத்தாலும் வேலைகள் செய்து அதில் கிடைக்கும் வருவாயில் குடும்பம் நடத்தவே சரியாக உள்ளதால் குழந்தைகளின் படிப்பும், மருத்துவ செலவுக்கும் திண்டாடும் நிலை தான் உள்ளது. விசாரணை முடிந்தாலும் ஏதோ சில காரணங்களால் மீண்டும் முதலில் இருந்து விசாரணை என்கிற போது கூடுதல் செலவு, மன உளைச்சலில் நிம்மதி இன்றி வாழவேண்டி உள்ளது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு நிரந்த விசா தான். நிரந்தர விசா கிடைத்தால் மருத்துவ அட்டையும், குழந்தைகளுக்கான இலவச கல்வியும் கிடைக்கும் என்கிற நிலை.
ஆஸ்திரேலிய அரசாங்கத்திடமும் அமைச்சர்களிடமும் 'எங்களுக்கு நிரந்தர விசா வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்த நிலையில், 22 பெண்கள் மெல்போர்னில் இருந்து பாராளுமன்றம் உள்ள கான்பராவுக்கு 670 கி மீ நடைப்பயணத்தை கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கினார்கள். நாளை 18 ஆம் தேதி கான்பரா பாராளுமன்றம் முன்பு கோரிக்கையை வலியுறுத்த வந்துள்ள இந்த நடை பயணக்குழு ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி கோரிக்கையை வலியுறுத்த உள்ளனர்.
இந்த கோரிக்கை நடைப்பயணம் குறித்து நடைப்பயணத்தில் உள்ளோர் கூறும் போது, “நியாயமான எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் பயணத்தை தொடங்கினோம். எங்கள் சின்னச் சின்ன குழந்தைகளை கூட வீட்டில் விட்டுவிட்டு நடந்து கொண்டிருக்கிறோம். நடைப்பயணத்தில் கால் வலியால் அவதிப்பட்டோம். ஆனாலும் எங்கள் கோரிக்கையை திட்டமிட்ட நாளில் பாராளுமன்றம் முன்பு கூடி சொல்ல வேண்டும் என்பதால், வலிகளை பொறுத்துக் கொண்டு பயணிக்கிறோம். எங்கள் பயணம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. கோரிக்கையும் இறுதிக் கட்டமாக இருக்க வேண்டும். ஷ்யாமளா சசிக்குமார் நடைப்பயணத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் பயணத்தில் கலந்து கொண்டார்.
எங்களில் பரமேஸ்வரிமோகன் குழந்தைகள் உட்பட பலர் இந்தியாவில் உள்ளனர். அவர்களை போய் பார்க்கக்கூட எங்களுக்கு பாஸ்போர்ட், விசா எடுக்க முடியாமல் கண்ணீரோடு தவிக்கிறோம். நாளை 18 ஆம் தேதி புதன் கிழமை பல ஆயிரம் பேர் பாராளுமன்றம் முன்பு கூடி நின்று அமைதியான முறையில் எங்கள் கோரிக்கையை அரசாங்கத்திடம் சொல்லப் போறோம்” என்றனர். வழி எங்கும் வலிகள் நிறைந்த இந்த பயணத்திற்கு நிரந்தர விசா மட்டுமே இவர்களுக்கு வலி நிவாரணியாக இருக்கும். மீண்டும் இலங்கைக்கு அனுப்புவோம் என்ற நிலையை அரசாங்கம் மாற்ற வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.