கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் தொன்மை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசிமக பெருவிழா ஆண்டுத்திருவிழாவாக 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
மாசிமக பெருவிழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல், நாள்தோறும் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெற்று வந்தன. இந்நிகழ்ச்சியின் முக்கிய திருவிழாவன தேரோட்டம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் விநாயகர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 பஞ்ச மூர்த்திகளும், தனித் தனியாக 5 திருத்தேர்களில் எழுந்தருளினர்.
அலங்கரிக்கப்பட்ட தேர்களை 'ஓம் நமச்சிவாய' என்ற முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சன்னதி வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதிகளின் வழியாகச் சென்ற தேர்கள் ஆலய நிலையை அடைந்தன. தேர்த் திருவிழாவை முன்னிட்டு காவல் துறை உதவி கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.