திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகேயுள்ள காட்டுக்காநல்லூர் கிராமத்தில் ஒவ்வொரு பொங்கல் திருவிழாவின்போதும் காளை விடும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டு கரோனாவைக் காரணம் காட்டி காளை விடும் விழாவுக்கு அனுமதி வழங்கவில்லை. அனுமதி பெற விழாக்குழுவினர் முயற்சி செய்தும் அந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. இதனால் அதிகாரிகள் மீது அதிருப்தியாகினர். அவர்களைக் கண்டிக்கும் விதமாக ஒரு போட்டி நடத்த முடிவு செய்தனர்.
காளை விடும் விழா நடத்தினால்தானே தப்பு, நாய் விடும் நிகழ்ச்சி நடத்துகிறோம் என விழா நடத்தி அதரிகாரிகளுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளனர். அந்தக் கிராமத்தின் குறிப்பிட்ட பிரிவு இளைஞர்கள், மார்ச் 8ஆம் தேதி தெரு முழுவதும் சவுக்கு கட்டைகள், வாழை மரங்கள் கட்டி, காளைகளை அவிழ்த்துவிடுவதற்காக வாடிவாசல் அமைப்பது போல், நாய்களுக்கும் வாடிவாசல் அமைத்தனர். முதல் பரிசு வெல்லும் நாய்க்கு 1000 ரூபாய், இரண்டாம் பரிசாக 700 ரூபாய், மூன்றாம் பரிசாக 650 ரூபாய் என பத்து பரிசுகள் அறிவித்திருந்தனர். நாய் கடித்தால், அதற்கு விழாக் குழு பொறுப்பு அல்ல என்றும் அறிவிப்பு நோட்டீஸில் தெரியப்படுத்தியிருந்தனர்.
போட்டியில் கலந்துகொள்ளும் நாய்களுக்கு நுழைவுக் கட்டணமாக 100 ரூபாய் வசூலித்துள்ளனர். பரிசுத் தொகை என்றதும் 50க்கும் மேற்பட்டோர் நாய்களுடன் களத்துக்கு வந்தனர். விழாவைக் காண கூட்டமும் கூடியது. விழாவில் பங்குபெற்ற சில நாய்கள் மட்டும்தான் வளர்ப்பு நாய்கள், மற்றவை தெருவில் சுற்றிக்கொண்டிருந்த நாய்களைப் பரிசுத்தொகைக்காக சிலர் பிடித்து வந்து வாடிவாசலில் நிறுத்தினர். நாய்களை ஓடவிட்டு நிகழ்ச்சியை நடத்தினர். தாமதமாக தகவலறிந்து அந்தக் கிராமத்துக்கு வந்த கண்ணமங்கலம் காவல்நிலைய போலீஸார், விழா நடத்திய விழாக் குழுவினரை எச்சரித்து போட்டியை நிறுத்த வைத்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக, காட்டுக்காநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் பொற்கொடி கண்ணமங்கலம் போலீஸில் புகாரளித்தார். புகாரில், அனுமதியின்றி நாய்கள் விடும் விழா நடத்திய விழாக்குழு மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார். அதேபோல், வண்ணாங்குளம் கால்நடை மருத்துவர் முத்துக்குமரனும் புகார் செய்தார். விழாக்குழுவைச் சேர்ந்த காட்டுக்காநல்லூர் காலனியைச் சேர்ந்த பரத், மோகன்ராஜ், ராஜன், கணேஷ், ஜெய்கணேஷ், கிரண், செல்லப்பன், ஆகாஷ் ஆகிய 8 பேர் மீது கரோனா தடுப்பு கட்டுப்பாட்டை மீறியதாகவும், நாய்களைத் துன்புறுத்தி ஓடவிட்டதாகவும் மிருகவதை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.