கடன் வாங்கி வெட்டின கிணத்தைக் காணோம் என்று நடிகர் வடிவேலு காவல் நிலையத்தில் புகார் கொடுத்த கையோடு கிணறு இருந்த இடத்திற்கும் அழைத்துச் சென்று காண்பிக்கும் அந்தக் காட்சி சிரிப்பதற்கு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்தது. அந்தக் காட்சிக்குப் பிறகு பல இடங்களிலும் நீர்நிலைகளைக் காணவில்லை என்று புகார் கொடுத்துவருகின்றனர். அதே போல, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தில் கீரமங்கலம், நகரம், சேந்தன்குடி ஆகிய 3 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரியாத்தாள் ஊரணி ஏரிக்கு அம்புலி ஆற்றில் காமராஜர் கட்டிய அணையிலிருந்து தண்ணீர் வருவதோடு மேல பல பகுதிகளில் இருந்தும் தண்ணீர் வர வழிகள் இருந்துள்ளன.
ஆனால் தற்போது நீர்வழித்தடங்கள் காணாமல் போனதோடு நீர்நிலையும் ஆக்கிரமிப்புகளால் சுறுங்கிவிட்டது. இந்தக் குளம் நிறைந்தால் வடக்கு பக்கம் பாசனத்திற்காக 1808இல் குமிழி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றியுள்ள 25 கிராமங்களுக்கு நிலத்தடி நீர் குறையாமல் இருக்கும். இப்படியான குளத்தைக் காணவில்லை, அதனைக் கண்டுபிடித்துத் தாருங்கள் என்று பலமுறை மாவட்ட நிர்வாகம் தொடங்கி வருவாய்த் துறைவரை புகார் கொடுத்தும் பலனில்லை என்று கீரமங்கலம் காவல் நிலையத்தில் காணாமல் போன குளத்தைக் கண்டுபிடித்துத் தாருங்கள் என்று 'நீரின்றி அமையாது உலகு' என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் புகார் கொடுத்துள்ளனர்.
இந்தப் புகாருக்காவது நடவடிக்கை இருக்குமா? இந்த நிலையில் 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுவுக்கு அம்புலி ஆற்றில் இருந்து இந்த ஏரிக்குத் தண்ணீர் வரும் கால்வாய் தடுப்புச்சுவர் அமைப்பது குறித்த ஆய்வும் நடந்துள்ளது.