
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சவுக்கத் அலி. இவர் அதே பகுதியில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த யூசுப் என்ற இளைஞர் சூப்பர் மார்க்கெட் முன்பு கஞ்சா புகைப்பது மற்றும் மதுபானம் அருந்திக் கொண்டிருந்துள்ளார். இப்படி செய்தால் மக்கள் எப்படி கடைக்கு வருவாங்க, இங்க வர்றதுக்கே பெண்கள் பயப்படறாங்க என சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் தட்டிக் கேட்டுள்ளார்.
அப்போது அங்கிருந்து சென்றவர்கள், என்னையே கேள்வி கேக்குறியா என ஆத்திரமடைந்த யூசுப் அவனது நண்பன் சுலைமான் இருவரும் நவம்பர் 13 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு மது பாட்டிலில் எரிபொருள் நிரப்பி தீ வைத்து கடை மீது வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அந்த பாட்டில் கடையின் வாசலில் விழுந்து தீ பற்றி எரிந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி அணைத்துள்ளனர்.
பின்னர் இது குறித்து சவுக்கத் அலி, வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சூப்பர் மார்க்கெட் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து மதுபாட்டிலில் எரிபொருள் நிரப்பி தீ வைத்து வீசிய நபர்களைத் தேடி வருகின்றனர்.