தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள 550 ஏக்கர் பரப்பளவுள்ள குளத்தை தங்கள் சொந்த முயற்சியில் பொதுமக்களின் பங்களிப்போடு சொந்த செலவில் இளைஞர்கள் தூர்வாரி வருகின்றனர். குளத்தை பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை இளைஞர்களின் பணியை பார்த்து வியந்து போனார். மேலும் சொந்த பணிகளை விட்டுவிட்டு எதிர்கால தேவைக்காக நீர்நிலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பெருமளவில் நிதியுதவி அளித்த பொன்காடு கிராமத்தினர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பொருளாதார உதவிகள் செய்த முகம் தெரியாத கொடையாளர்களை பாராட்டினார்.
தொடர்ந்து ஆட்சியரிடம் தற்போது நடந்து கொண்டுள்ள பணிகள் மற்றும் திட்டமிட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கடைமடைப் பகுதி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் எடுத்துக் கூறினர்.
தொடர்ந்து பேசிய ஆட்சியர், "நீர்நிலைகளைப் பாதுகாப்பது குறித்து இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு போற்றத்தக்கது. பணிகளை நல்ல முறையில் செய்யுங்கள். படிக்கட்டுகள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்து தரப்படும். குடிமராமத்து பணியில்,பொதுமக்கள் பங்களிப்புடன் செய்ய பல்வேறு திட்டங்கள் உள்ளன. உரிய அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கை அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
அவருடன் ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட திட்ட இயக்குநர் மந்திராசலம், செய்தி மக்கள்தொடர்பு அலுவலர் போ.சுருளிபிரபு, ஆகியோர் உடனிருந்தனர்.