புகையிலை பொருள்களை கள்ளச்சந்தையில் விற்று வந்த வாலிபரை மிரட்டி பணம் பறித்த சிறை கைதிகள் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் அன்னதானப்பட்டி பொடாரன்காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25). இவர் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான்பராக் உள்ளிட் புகையிலைப் பொருள்களை மளிகை கடைக்கு ரகசியமாக விற்பனை செய்து வந்தார்.
கடந்த மாதம் ஒரு கும்பல் அவரை தொடர்பு கொண்டு, தங்களிடம் அதிகளவில் குட்கா பொருள்கள் உள்ளதாக கூறியுள்ளனர். அதற்கு பிரகாஷ், தான் தற்போது அந்த தொழிலைச் செய்வதில்லை எனக்கூறியுள்ளார். ஆனால் குறைந்த விலைக்கு தருகிறோம் என ஆசை வார்த்தை கூறி பிரகாஷை மர்ம நபர்கள் 5 பேர், சேலம் ஊற்றுமலைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பிரகாஷை கட்டிப்போட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அவர்கள், வீட்டில் இருந்து அவருடைய தந்தை மூலமாக உடனடியாக 3 லட்சம் ரூபாயை எடுத்துவந்து கொடுத்தால்தான் உயிருடன் விடுவிப்போம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து பிரகாஷ் தன் தந்தையிடம் கூறியுள்ளார். அவரும் வீட்டில் இருந்து 3 லட்சம் ரூபாயை எடுத்து வந்து மர்ம நபர்களிடம் கொடுத்தார். பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்கள், பிரகாஷை ஊற்றுமலையிலேயே விட்டுவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.
இந்நிலையில், கடந்த 15 நாள்களுக்கு முன்பு கிச்சிப்பாளையம் காவல்நிலைய காவல்துறையினர் வழிப்பறி வழக்கில் நான்கு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதுகுறித்து பத்திரிகை செய்திகள் வாயிலாக அறிந்த பிரகாஷ், வழிப்பறி கைதான நான்கு பேர் உள்ளிட்ட ஐந்து பேரும் சேர்ந்துதான் தன்னை கடத்திச்சென்று பணம் பறித்ததாக, அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கபாலி, மணிகண்டன், வீரமணி, சரத் உள்ளிட்ட 5 பேரும்தான் பிரகாஷிடம் கைவரிசைக் காட்டியது என்பதை அன்னதானப்பட்டி காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். இதையடுத்து, சேலம் நான்காவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் அவர்களை கைது செய்வதற்கான ஆணையைப் பெற்றனர்.
கைது ஆணை கிடைத்ததை தொடர்ந்து, சேலம் மத்திய சிறையில் இருந்த நான்கு பேரையும் அன்னதானப்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவர்களின் கூட்டாளி ஒருவரை தேடி வருகின்றனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.