கோவை மாவட்டத்தின் அடையாளங்களில், வெளியூர் மக்கள் அதிகம் விரும்பும் இடமாக உள்ளது வெள்ளியங்கிரி மலை. ஏழு மலை, எழில் கொஞ்சும் இயற்கை என்று ஆன்மிகத்தைக் கடந்தும் வெள்ளியங்கிரி மலையை ரசிக்க பல காரணங்கள் பட்டியலிடப்படுகின்றன. அவ்வளவு அழகைக் கொண்டுள்ள வெள்ளியங்கிரி மலையில் ஆபத்தும் நிறைந்து இருக்கிறது என்று எச்சரிக்கை செய்கின்றது வனத்துறை. ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சோசியல் மீடியாக்கலில் வரும் டிராவல் வீடியோக்களை பார்த்து இளைஞர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு படையெடுத்து வருவது குறைந்தபாடில்லை.
முறையான பயிற்சி இல்லாமல் வெள்ளியங்கிரியில் பலர் மலையேற்றம் செய்ததால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் முதல் பக்தர்கள் வனப்பகுதிகளுக்குச் செல்ல அனுமதி இல்லை என வனதுறையினர் அறிவித்து இருந்தனர். இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு யாரிடமும் அனுமதி இல்லாமல் வனத் துறையினரின் எச்சரிக்கை மீறி சிலர் வெள்ளியங்கிரி மலைக்குச் சென்றுள்ளனர். ஆனால், திரும்பி வரும்போது தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிடக் கூலித் தொழிலாளி முனியராஜ் என்பவர் மட்டும் காணமல்போனது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சட்ட விரோதமாக மலையேற்றம் செய்தவர்களில் காணமல் போன கட்டிடக் கூலித் தொழிலாளியை மீட்க, வனத் துறையினர் ஐந்து பேர் கொண்ட குழுவாக வெள்ளியங்கிரி மலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வாரம் கடந்தும் காணமல் போனவரின் நிலை தெரியவில்லை.
கோவை வெள்ளியங்கிரி மலையில் சட்ட விரோதமாக மலையேற்றம் செய்த நபர் காணாமல் போனதால், அவரை ஒரு வாரத்திற்கு மேலாக வனத்துறை தேடி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.