புலிகள் காப்பகமாக உள்ள சத்தியமங்கலம் மலைப் பகுதியில் வன விலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. யானை, காட்டெருமை, செந்நாய், மான்கள், கரடிகள் இவற்றோடு புலிகள் மற்றும் சிறுத்தைகளும் அதிகமாக வாழ்கின்றன.
வன விலங்குகளில் புலி மற்றும் சிறுத்தைகள் மற்ற விலங்குகளுக்கு சவாலாய் இருக்கும். புலி எப்படி பாய்கிறதோ, அப்படித்தான் சிறுத்தையின் பாய்ச்சலும் இருக்கும். இவற்றை கண்டால் மற்ற விலங்குகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பயந்து ஓடும். ஆனால் என்னதான் வல்லவனாக இருந்தாலும் அதையும் முறியடிக்கும் திறன் உள்ளது என்பதை நிரூபித்துள்ளது ஒரு கரடி.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலையில் தமிழக எல்லையில் உள்ளது தாளவாடி வனப்பகுதி. இங்குதான் புலி மற்றும் சிறுத்தையின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. மேலும் அவைகளின் வாழ்விடமாகவும் இந்த இடம் உள்ளது.
இந்த நிலையில், தாளவாடியிலிருந்து தலமலை செல்லும் வனச்சாலையில், சிக்கள்ளி பிரிவு என்ற இடத்திலிருந்து சிறிது தூரத்தில் இரிபுரம் பள்ளம் என்கிற அடர்ந்த வனப்பகுதி இருக்கிறது. இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டரிலேயே மலை வாசிகள் குடியிருக்கும் வனக் கிராமமும் உள்ளது. 5 ந் தேதி நள்ளிரவில் விலங்குகள் சண்டையிடும் சத்தம் கேட்டதால் 6 ந் தேதி அதிகாலை வனத் துறையினருக்கு மலை மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
தாளவாடி பாரஸ்ட் ரேஞ்சர் சிவக்குமார் தலைமையில், அப்பகுதிக்குச் சென்று வன அலுவலர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட, ஒரு சிறுத்தை வயிறு கிழிந்து இறந்து கிடந்துள்ளது. பிறகு வனத்துறை மருத்துவர் வரவழைக்கப்பட்டு அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். இறந்த சிறுத்தைக்கு நான்கு வயது என்றும், இது வேட்டைக்காக கொல்லப்படவில்லையென்றும் தெரிய வந்திருக்கிறது. காரணம் வேட்டைக்காக கொல்லப்பட்டால் சிறுத்தையின் நகம், பல், தோல் இல்லாமல் இருந்திருக்கும். ஆனால் எதுவும் எடுக்கப்படாமல் சிறுத்தை இறந்து கிடந்துள்ளது. இந்த காரணத்தைக் கூறிய வனத்துறையினர், இறந்த சிறுத்தையுடன் வேறு காட்டு விலங்கு ஒன்று மோதி சண்டையிட்டுள்ளது, அந்த மிருகம்தான் சிறுத்தையை கொன்றுள்ளது என்றனர். இறந்த சிறுத்தை அவ்விடத்திலேயே எரியூட்டப்பட்டது.
"இரண்டு காரணம் தாங்க, இறந்தது பெண் சிறுத்தை என்பதால் மற்றொரு ஆண் சிறுத்தை உறவுக்காக சண்டை போட்டிருக்கும், அதில் பெண் சிறுத்தை சம்மதிக்காமல் சண்டையிட, ஆண் சிறுத்தை கோபத்துடன் தனது நகத்தால் பெண் சிறுத்தை உடலை கிழித்திருக்கும்... இதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் கூரிய நகத்தின் தடங்கள் சிறுத்தையின் வயிற்றில் உள்ளது. அப்படிப் பார்த்தால் இது கரடியோடு மோதியது போலத்தான் இருக்கிறது. பெண் சிறுத்தை கரடியை வேட்டையாட முனைந்திருக்கும் கரடியின் பலமே அவற்றின் கால்களில் உள்ள கூரிய நகங்களும் வாயிலுள்ள பற்களும்தான்.
முடி அதிகமாக இருப்பதால் கரடியின் உடலில் காயம் ஏற்படுவதற்கு முன் அதை லாவகரமாக சுதாரித்துக் கொண்டு சிறுத்தையின் வயிற்றை கால் நகங்களால் கிழித்திருக்கும். அடிபட்டு வயிறு கிழிந்த சிறுத்தை அந்த இடத்திலுருந்து தப்பிக்க பார்த்திருக்கும் சிறுத்தையோடு சண்டையிட்ட கரடி அடுத்து யாரும் வந்து தன்னை தாக்கிவிடக் கூடாது என்பதால் அந்த இடத்தை விட்டு வேறு பகுதிக்கு ஓடியிருக்கும். கரடி தாக்கி வயிறு கிழிந்த சிறுத்தை அங்கேயே இறந்திருக்கும் இப்படித்தான் இருக்கும். வன விலங்குகள் சண்டையில் கரடிக்கு பலமில்லையென நினைக்கக்கூடாது. உயிர் பயத்தில் இருக்கும்போது, எதிரி எப்படிப்பட்ட பலசாலியாக இருந்தாலும் சண்டையில் கொல்ல முடியும் என்பதையே சிறுத்தையை கொன்று கரடி சாதித்துள்ளது" என்கிறார்கள் மலை வாசிகள்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இதே சிக்கள்ளி வனப்பகுதியில், பெண் புலி ஒன்று காயத்துடன் இறந்து கிடந்தது. ஆதிவாசிகள், மலைவாசிகள் அடர்ந்த இந்த வனப்பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள பல குக்கிராமங்களில் அதிகம் வசிக்கிறார்கள். ஆடு, மாடு மேய்ச்சல், வனப் பொருட்கள் சேகரிப்புக்காக இந்த அலங்காட்டுக்குள் மலைவாசிகள் செல்வது அவர்களின் வாழ்வியல் முறையாக உள்ளது. முன்பெல்லாம் நடுகாட்டில் தென்படும் யானைகள், காட்டெருமைகளை வினோதமான சப்தம் எழுப்பி அவைகளை விரட்டி விட்டு திரும்பி வருவார்கள். கடந்த சில வருடங்களாக புலிகள், சிறுத்தைகளையும் காட்டுக்குள் சந்திக்கிறார்கள். இவைகளையும் இவற்றோடு மோதாமல் காட்டு மொழி எழுப்பி அவைகளை வேறு திசையில் ஓடவிட்டு பாதுகாப்பாக வருகிறார்கள். இங்கும் பலர் "புலி முருகனாக" வனப் பயிற்சி பெற்றுள்ளார்கள். ஆனால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக்கொள்கிறார்கள். ஆகவேதான் இது மற்றொரு புலி முருகனால் கொல்லப்பட்ட சிறுத்தை இல்லை, மோதலில் கரடியால் கொல்லப்பட்டது என்கிறார்கள்.