திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்திற்கு அருகே உள்ளது ஆத்துப்பாக்கம் ஊராட்சி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். 31 வயதான இவர் லாரி டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். பிரகாஷும் கிருஷ்ணாபுரம்கண்டிகையைச் சேர்ந்த சக லாரி ஓட்டுநரான சூர்யா என்பவரும் நண்பர்களாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், பிரகாஷ் கடந்த சில மாதங்களாக மிகுந்த வறுமையில் இருந்துள்ளார். அந்த நேரத்தில் செலவுக்கு பணம் இல்லாததால் தனது நண்பரான சூர்யாவிடம் இருந்து அரை சவரன் தங்க நகையை வாங்கி அடகு வைத்துள்ளார். ஆனால், சூர்யாவிடம் இருந்து வாங்கிய அரை சவரன் தங்க நகையை பிரகாஷ் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நண்பர்களாக இருந்த பிரகாஷ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் எதிரிகளாக மாறினர். இவர்கள் பார்த்துக்கொள்ளும் இடத்தில் எல்லாம் சிறு சிறு உரசல்கள் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 25 ஆம் தேதியன்று அக்கரம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மண் குவாரியி்ல் பிரகாஷ் தனது லாரியில் சவுடு மணல் எடுக்கச் சென்றுள்ளார். அந்த சமயம் அங்கு சூர்யாவும் லோடு எடுத்துக் கொண்டிருந்தார். இதையடுத்து அந்த குவாரியில் இருந்து வெளியே வரும்போது பிரகாஷ் மற்றும் சூர்யாவிற்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த வாக்குவாதம் திடீரென கைகலப்பாக மாற இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த சூர்யா தன்னுடைய லாரியில் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து வந்து பிரகாஷை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
படுகாயமடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் போலீசார், பிரகாஷின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள சூர்யாவை வலைவீசித் தேடி வருகின்றனர். அரசு சவுடு மண் குவாரியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.