திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிக்குட்பட்ட ஒரு ஊராட்சியைச் சேர்ந்த கூலி தொழிலாளியின், 17 வயது மகள், கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டுவருவதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு சென்றுள்ளார். ஆனால், அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பாததால் பதறிய அவரது பெற்றோர், அவர்களது உறவினர்கள் வீடு உட்பட பல்வேறு இடங்களில் இளம் பெண்ணை தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இளம் பெண் காணவில்லை என புகாரை பதிவு செய்த திருத்தணி காவல்துறையினர், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் அந்த இளம் பெண் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்தத் தகவலைத் தொடர்ந்து திருத்தணி காவல்துறையினர் சித்தூருக்கு விரைந்தனர். அவர்கள் இருப்பதாக தகவல் கிடைத்த பகுதிக்கு சென்று சோதனையிட்டபோது, அங்கு அந்தப் பெண்ணும் ஒரு இளைஞரும் இருந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் திருத்தணி காவல்நிலையத்திற்கு அழைத்துவந்த போலீஸார், அந்த இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் 17 வயது இளம் பெண், “திருத்தணி அருகில் உள்ள வி.கே.என் கண்டிகை பகுதியைச் சேர்ந்த பாலாஜி (29), என்னை காதலிப்பதாக கூறினார். நானும் அவரை காதலித்தேன். பிறகு பாலாஜி, என்னை பள்ளிப்பட்டு வட்டம், கரிபேடு முருகன் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியில் தனியாக ஒரு வீடு வாடகைக்கு எடுத்து இருந்தோம். அந்த சமயத்தில், என்னிடம் பாலாஜி வலுக்கட்டாயமாக பலமுறை உடலுறவு வைத்துக் கொண்டார். இதனால் நான் 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். பாலாஜி குறித்து போலீஸார் விசாரித்தபோது, அவர் அந்தப் பெண்ணுக்கு சித்தப்பா முறை வருவது தெரியவந்தது.
முதலில் மிஸிங்க் கேஸாக போலீஸார் பதிவு செய்திருந்த நிலையில், இளம் பெண்ணின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, பாலாஜி மீது போக்ஸோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாலாஜி, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.