நாமக்கல் அருகே, காரில் சென்று கொண்டிருந்த ரியல் எஸ்டேட் தரகரை வழிமறித்து கொலை செய்த வழக்கில் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் ஜெய் நகரைச் சேர்ந்தவர் குமரேசன் (45). ரியல் எஸ்டேட் தரகர். ஜூலை 19ம் தேதி இரவு, டாஸ்மாக் பாரில் அமர்ந்து மது குடித்த இவர், நள்ளிரவுக்கு மேல் தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
திருச்சி சாலை ரயில்வே மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அவருடைய காரை வழிமறித்த வாலிபர் ஒருவர், குமரேசனை கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இச்சம்பவம் குறித்து நாமக்கல் நகர காவல்நிலைய காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இரண்டு நாட்களாக துப்பு கிடைக்காமல் தடுமாறிய காவல்துறையினர், சந்தேகத்தின்பேரில் நாமக்கல் ஜெய் நகரைச் சேர்ந்த நவீன் (25) என்ற இளைஞரை வியாழக்கிழமை (ஜூலை 21) காலையில் பிடித்து விசாரித்தனர்.
சம்பவத்தன்று இரவு, குடிபோதையில் காரை ஓட்டி வந்த குமரேசன், கொலை நடந்த இடம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த நவீனை பார்த்து, சாலையில் ஒழுங்காக நடந்து போடா... என்று மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நவீன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குமரேசனை குத்திக் கொன்றுவிட்டு தப்பிச்சென்றுவிட்டது விசாரணையில் தெரிய வந்தது.
எனினும், கொலையாளியைப் பற்றிய முழுமையான விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஆரம்பக்கட்ட விசாரணையின்போது, கொலையுண்ட குமரேசன் சம்பவத்தன்று இரவு, நண்பர் ஒருவருடன் மது அருந்துவிட்டு அவருடன் காரில் வீடு திரும்பியதாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில்தான் குமரேசனை உடன் வந்த நண்பரே குத்தி கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
தற்போது பிடிபட்டுள்ள நவீன், எப்போதும் தன்னுடன் கத்தி வைத்துக்கொண்டு சுற்றக்கூடியவரா, அவர் மீது காவல்நிலையங்களில் வேறு ஏதேனும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளனவா, இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை நடந்துவருகிறது.