அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 23ம் தேதி கூடவிருக்கிறது. இதன் காரணமாக நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் மா.செக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அலுவலகத்தின் வெளியே இருந்த தொண்டர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். அதில் சிலர் ஓ.பி.எஸ். தலைமையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் கூட்டம் முடிந்து வெளியே வந்த அதிமுக செய்தித்தொடர்பாளர் ஜெயக்குமார் ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்துப் பேசப்பட்டதாகத் தெரிவித்தார்.
இது அதிமுக அரசியலில் இன்னும் பரபரப்பைக் கூட்டியது. அதேபோல், நேற்று இரவு திடீரென ஓ.பி.எஸ் முன்னாள் அமைச்சர்கள் சிலருடன் தனது வீட்டில் ஆலோசனை நடத்தினர். மேலும், இன்று காலை ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ். இருவரும் தனித்தனியே அவர்கள் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். அப்படி ஈ.பி.எஸ் வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார், மாவட்டச் செயலாளர்கள் விருகை.ரவி, ஆர்.எஸ். ராஜேஷ், வெங்கடேஷ் பாபு, தி. நகர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக்கு பின் வெளியே வந்த முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் செய்தியாளர்கள் மைக்கை நீட்டினர். அப்போது அதிமுக தொண்டர் ஒருவர் (ஓபிஎஸ் ஆதரவாளர்) ''ஐயா அவரை தலைமையில் உக்கார வைங்க அய்யா, ஒற்றை தலைமையுடன் கட்சி நல்லா இருக்கணும்'' எனக் கூறினார். அவரிடம் ''இங்க வாயா... உன்னுடைய கோரிக்கையும் நிறைவேற்றப்படும்'' என முன்னாள் முதல்வர் எடப்பாடி பாணியில் பதில் சொல்ல, அங்கிருந்த ஆதரவாளர்கள் ''அய்யா ஓபிஎஸ்... வாழ்க...'' என கோஷமிட்டனர்.