Skip to main content

செல்போன் டவரையும் விட்டு வைக்காத இளம் வயது கொள்ளையர்கள்

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

Young thieves who never leave the cell phone tower

 

இந்திய அளவில் செல்போன் பயன்படுத்தாதவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. செல்போன் பயன்பாட்டிற்காக நகரம் கிராமம் என்ற பாகுபாடு இல்லாமல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது ஓங்கி உயர்ந்து நிற்கும் செல்போன் டவர்கள். அவ்வப்போது உங்கள் இடத்தில் செல்போன் டவர் அமைப்பதற்கு இடம் கொடுத்தால் பல லட்சம் சம்பாதிக்கலாம் என்று கூறி மர்ம நபர்கள் பொதுமக்களிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விவசாயிகளிடம் பணம் பறித்துச் செல்வதும் நடந்த வண்ணம் உள்ளன.

 

மேலும் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ள பகுதியைச் சுற்றிலும் குடியிருக்கும் மக்களுக்குப் பலவிதமான நோய்கள் உருவாகும். அதற்குக் காரணம் செல்போன் டவரில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சுகள் தான் என்றும் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் செல்போன் டவர் அமைக்கக்கூடாது என்று போராட்டங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கின்றன. அப்படிப்பட்ட செல்போன் டவர்களில் கொள்ளை நடத்தி போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர் மூன்று இளைஞர்கள்.

 

விழுப்புரம் மாவட்டம் கிடார், பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு செல்போன் டவர்களில் பொருத்தப்பட்டிருந்த சுமார் முப்பதாயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செல்போன் டவர் நிறுவனத்தினர் கிடார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அரியலூர் திருக்கை, பகுதியில் மூன்று இளைஞர்கள் சந்தேகப்படும் வகையில் சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்களை அழைத்து போலீசார் விசாரித்தனர். மூவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியது காவல்துறையினருக்குச் சந்தேகம் வலுத்தது.

 

அவர்களைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று முறைப்படி விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த 28 வயது ஜாவித் அன்சாரி, 20 வயது ராகீத் என்பதும், இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பதும் தெரியவந்தது. மூன்றாவது நபர் விழுப்புரம் வி. மருதூர் பகுதியைச் சேர்ந்த 30 வயது சுசில் குமார் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் மூவரும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கம்ப்யூட்டர் மற்றும் அது சம்பந்தமான உதிரிப்பாகங்கள் விற்பனை செய்து வருகிறார்கள். அதோடு கம்ப்யூட்டர் பழுதுகளையும் சரி செய்து வருகிறார்கள். இவர்கள் மூவரது செல்போன் என்னைக் கொண்டு ஆய்வு செய்ததில் மூவரும் கிடார் பகுதி செல்போன் டவர்களின் உதிரிப் பாகங்களைக் களவாடிச் சென்றது தெரியவந்தது. அதையடுத்து மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தின் மூலம் சிறையில் அடைத்துள்ளனர். செல்போன் டவரை விட்டு வைக்காமல் தங்கள் கைவரிசைக் காட்டிய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்