இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார்(26). இவர் சென்னை ஓரகடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் செல்போன் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார். அதே நிறுவனத்தில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவரும் அங்குச் சென்று வேலைக்குச் சேர்ந்து வேலை செய்து வந்துள்ளார்.
அந்தக் காலகட்டத்தில் வினோத் குமார் அந்த இளம்பெண் இருவருக்கும் இடையே அறிமுகமான பழக்கம் பிறகு காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுப் பிரிந்து விட்டனர். அந்தப் பெண் தன் சொந்த ஊருக்கு வந்து விட்டார். ஆனால் வினோத் குமார் அந்த பெண்ணின் ஊருக்கே தேடி வந்து அந்த பெண்ணிடம் தன்னை மீண்டும் காதலிக்க வேண்டும்; என்னோடு சென்னைக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். அந்த இளம்பெண் முடியாது என மறுத்ததால் அவரை திட்டி வினோத்குமார் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும் இருவரும் காதலித்த போது சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உன்னை அவமானப்படுத்துவேன் என்று வினோத்குமார் கூறி மிரட்டியதாகவும் தெரிகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் வேப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வேப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா, வினோத்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளார்.