சாலை ஓரங்களில் வீணாகும் மழைநீரை, குழாய்கள் அமைத்து, பழைய கிணற்றில் சேமித்து, நிலத்தடி நீரை உயர்த்திவருகிறார் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு இளைஞர்.
தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளுக்குத் தண்ணீர் செல்லும் வரத்து வாரிகள் இல்லாமல், கனமழை பெய்தாலும் நீர்நிலைகளுக்குத் தண்ணீர் போகாமல் ஆங்காங்கே தேங்கி, பயிர்களும் குடியிருப்புகளும் சேதமடைந்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, சேந்தன்குடி, செரியலூர், மறமடக்கி, உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களில் கனமழை பெய்தாலும், வரத்து வாய்க்கால்கள் இல்லாமல் வீணாகும் மழை நீரை சேமிக்க, இளைஞர்கள் நீர்நிலைகளைச் சீரமைத்துள்ளனர். அதேபோல் கொத்தமங்கலத்தில் விவசாயி வீரமணி வீட்டின் கூரையில் விழும் மழைநீர் வீணாகாமல், குழாய்கள் மூலம் பெரிய தொட்டிகளில் சேமித்துவைத்துக் குடிக்கவும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகிறார்.
அதேபோல், கடந்த ஆண்டு கைஃபா தன்னார்வ அமைப்பினர், பயன்படுத்தப்படாமல் உள்ள ஆழ்குழாய்க் கிணறுகளில், மழைநீரைச் சேமிக்க குழாய்கள் அமைத்துச் செயல்படுத்தியுள்ளனர். இந்த நிலையில், கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தில் வசிக்கும் ராஜரத்தினம் என்பவரின் மகன் பொறியாளர் சத்தியசீலன்.
இவர், வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், நிலத்தடி நீரை சேமிக்க தனது தோட்டத்தில் உள்ள ஆழ்குழாய்க் கிணறுக்குப் பக்கத்தில் உள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள பழைய கிணற்றைப் பயன்படுத்த முடிவு செய்தார். தொடர்ந்து ஒரு பொறியாளரின் உதவியோடு, அப்பகுதியில் மழை நீர் வீணாகத் தேங்கி நிற்கும் பகுதியில், சல்லடையுடன் கூடிய தொட்டி அமைத்து, அதிலிருந்து குழாய்கள் மூலம் மழைநீரை தனது தோட்டத்தில் உள்ள பழைய கிணற்றில் சேமித்து வருகிறார். இதனால், கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழை நீர், சாலைகளில் தேங்கி வீணாகாமல் கிணற்றுக்குள் நிலத்தடி நீராகச் சேமிக்கப்பட்டுள்ளது. இப்படிப் பழைய, பயன்படாத ஆழ்குழாய்க் கிணறுகளில், மழைநீரைச் சேமிப்பதால், நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும் என்கிறார்கள் இளைஞர்கள்.