நாகை மாவட்டம், வேதாரண்யத்திற்கு அருகே உள்ளது புஷ்பவனம். இந்தக் கிராமத்தில் உள்ள அழகுகவுண்டர் காட்டைச் சேர்ந்தவர் சுந்தரவடிவேல். இவருக்கு 20 வயதில் அருண் என்ற மகன் இருக்கிறார். இந்த அருண் சேலத்தில் உள்ள தனியார் மயக்கவியல் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
கல்லூரியில் படித்துக்கொண்டே பிசினஸ் செய்ய வேண்டுமென்ற ஆர்வத்தில் இருந்த அருண், கொல்லிமலையில் இருந்து மளிகைப் பொருட்களை வரவழைத்து விற்பனை செய்து வந்துள்ளார். மேலும், தன்னிடம் விற்பனைக்காக உள்ள பொருட்களை சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் விளம்பரப்படுத்தி வந்துள்ளார். வாட்ஸ் ஆப் மூலம் தனது வியாபாரத்தை விரிவுபடுத்தி வந்த அருணுக்கு, அந்தப் பகுதியில் நல்ல வரவேற்பு இருந்துள்ளது. இதன் காரணமாக ஏராளமான நபர்கள் அருணுக்கு வாட்சப் செய்து மளிகைப் பொருட்களை வாங்கிக்கொள்வது வழக்கமாக இருந்துள்ளது. அவ்வாறு, வாட்ஸ்ஆப் மூலம் மளிகைப் பொருட்களை வாங்கும்போது, வேதாரண்யத்திற்கு அருகேயுள்ள தேத்தாக்குடி தெற்கு சிதம்பரவீரன்காடு பகுதியைச் சேர்ந்த துர்கா தேவி என்பவரோடு நட்பு ஏற்பட்டுள்ளது.
42 வயதான துர்கா தேவி திருமணமானவர். இவரின் கணவர் சுந்தரமூர்த்தி வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு 3 ஆண்டுக்கு முன்பு ஊருக்கு வந்து விவசாயம் பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 20 வயதில் மகன் ஒருவர் இருக்கிறார். இந்நிலையில், முதலில் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக மட்டுமே அருணோடு பேசி வந்த துர்கா தேவி, நாளடைவில் நெருங்கிப் பேசி வந்துள்ளார். பின்னர், ஃபோனிலும் இருவரின் உரையாடல் நீண்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் இன்னும் பெரிதாகி, இருவருக்குமிடையே திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதனால், அடிக்கடி இருவரும் ஃபோன் பேசிக்கொள்வதும் வாட்ஸ்ஆப் மூலம் வீடியோ கால் பேசுவதுமென நெருக்கம் அதிகமாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம், வீட்டுக்குத் தெரியாமல் வேதாரண்யத்தில் உள்ள புஷ்பவனம் கடற்கரைப் பகுதிக்குச் சென்று தனிமையில் இருந்து வந்துள்ளனர். துர்காதேவிக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம், அருண் வாரி வழங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த ஜூன் 18 ஆம் தேதி அருணுக்கு பிறந்தநாள் வந்துள்ளது. இந்தப் பிறந்த நாளை துர்கா தேவியுடன் கொண்டாட நினைத்த அருண், வழக்கமாக சந்திக்கும் புஷ்பவனம் பீச்சுக்கு அழைத்துள்ளார். அதன்படி, புஷ்பவனம் கடற்கரையை ஒட்டியுள்ள காட்டுப் பகுதிக்கு இருவரும் காரில் சென்றுள்ளனர். யாருமற்ற இடத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். எல்லாம் முடிந்த பிறகு, புறப்படுவதற்கு தயாரான அருணிடம், அவசரமாக தனக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் வேண்டுமென்று கேட்டுள்ளார்.
அதற்கு தன்னிடம் பணம் இல்லை என மறுத்துள்ளார் அருண். அப்போது, திடீரென ஆவேசமான துர்கா, எனக்கு ஒரு அவசரம்னா பணம் தர மாட்டியா? எனக் கொந்தளித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்கு வாதம் வந்துள்ளது. அந்த வாக்கு வாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் கோவத்தின் உச்சத்திற்கு சென்ற துர்கா, ஊருக்குள் போயி நீ எப்படிப்பட்டவன் என்பதை எல்லாரிடமும் சொல்றேன்... என ஆத்திரத்தோடு புறப்பட்டுள்ளார். இதனால் செய்வதறியாது தவித்து நின்ற அருண், இனி துர்காவை உயிரோடு விட்டால், தன்னைப் பற்றி எல்லோரிடமும் கூறிவிடுவார் எனத் தனது காரினை எடுத்துக்கொண்டு, துர்காவை நோக்கி வேகமாகச் சென்றுள்ளார். அப்போது, அருணை விட்டு வேகமாக நடந்து சென்ற துர்காவின் மீது ஏற்றியுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத துர்கா, பெரும் அலறல் சத்தத்துடன் கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த துர்கா வலியில் துடித்துள்ளார். ஆனால் அருண், மறுபடியும் காரை பின்னோக்கி எடுத்து மீண்டும் மேலே ஏற்றியுள்ளார்.
இப்படி மூன்று முறை ஏற்றியதும் அதே இடத்தில் துர்கா பரிதாபமாக இறந்துள்ளார். பின்பு அந்த சடலத்தை இழுத்துச் சென்று, பக்கத்தில் இருந்த புதருக்குள் போட்டுவிட்டு, வீட்டுக்குச் சென்றுள்ளார் அருண். மகளிர் குழு பணம் கட்டுவதாகச் சொல்லிவிட்டு வெளியே சென்ற மனைவி நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் பதற்றமடைந்த சுந்தரமூர்த்தியும் தனது மகனும் சேர்ந்து தேடியுள்ளனர். அப்போது, வேதாரண்யம் கடற்கரை பகுதியில் ரத்தக் காயங்களோடு ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக வாட்சப்பில் செய்தி பரவியுள்ளது. இதனைப் பார்த்த சுந்தரமுர்த்தி, அது தன்னுடைய மனைவி துர்கா என்பதை அடையாளம் கண்டு அழுது புலம்பியுள்ளார். அதே நேரத்தில், கடற்கரையில் பெண்ணின் சடலம் கிடக்கும் செய்தியறிந்து, சம்பவ இடத்திற்கு வேதாரண்யம் போலீசார் விரைந்து வந்துள்ளனர். அங்கு வந்த போலீசார், துர்காவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேதாரண்யம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இது குறித்து துர்காவின் கணவர் சுந்தரமூர்த்தியிடம் புகாரைப் பெற்றுக்கொண்டு விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விசாரணையின் போது, அருணுக்கும் துர்காவிற்கும் நெருங்கிய பழக்கம் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால், அருணை விசாரணைக்கு அழைத்து, முறைப்படி விசாரணை செய்துள்ளனர். போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் சிக்கிய அருண், நடந்த அத்தனை உண்மைகளையும் கூறி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். அதனையடுத்து, போலீசார் அருணை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். திருமணத்தை மீறிய உறவால் 42 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.