திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி. இவருக்கு திருச்சி சண்முகா நகர் மூன்றாவது குறுக்கு சாலையில் சொந்தமாக ஒரு பள்ளி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தனது நண்பரின் உறவினரான பாஜகவின் ஓ.பி.சி. அணியின் மாநிலத் தலைவரான சூர்யா சிவாவின் மனைவி அத்தினா சூர்யா என்பவரிடம் கடந்த 2019ம் ஆண்டு பள்ளியை நிர்வகிக்க மூன்று வருட கால வாடகைக்கு ஒப்பந்தம் போட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதத்துடன் பள்ளி நடத்துவதற்கான உரிமம் முடிவடைந்ததோடு அவர்களோடு போட்டிருந்த வாடகை ஒப்பந்தமும் முடிவடைந்தது. எனவே, உரிமம் முடிந்த நிலையில் மீண்டும் தங்களிடம் கொடுக்கச் சொல்லி அத்தினா சூர்யாவிடம் ஆர்த்தி கேட்டுள்ளார். அதற்கு அவர் தனது கணவரான சூர்யா சிவாவிடம் பேசச் சொல்லியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஆர்த்தி, சூர்யா சிவாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், மேலும் ஐந்து வருடம் தனக்கு ஒப்பந்தம் செய்து கொடுக்கச் சொல்லிக் கேட்டுள்ளார். அதற்கு ஆர்த்தி மறுத்ததோடு, பள்ளிக்கான உரிமமும் முடிந்துவிட்டது. கட்டடமும் மோசமான நிலையில் உள்ளது. அதனைப் புதுப்பிக்க வேண்டும். அதனால், எங்களிடம் கொடுங்கள் எனக் கேட்டுள்ளார். அதற்கு சூர்யா சிவா, நான் அரசியல் கட்சியில் பெரிய பொறுப்பில் (பாஜகவின் ஓ.பி.சி அணியின் மாநிலச் செயலாளர்) உள்ளேன். பள்ளிக் கட்டடத்தையும் வீட்டையும் காலி செய்ய முடியாது என்று கூறியதோடு அவர்களுக்குக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
சூரியா சிவா ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அபகரிக்க நினைப்பதாக திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார் ஆர்த்தி. மேலும், கொலை மிரட்டல் விடுவதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், பாதுகாப்பு வேண்டும் என்றும் காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார். சூர்யா சிவா கடந்த ஒரு வருட காலமாக கட்டடத்தை காலி செய்யாமலும், 6 மாத வாடகையும் தராமல் இருந்து வருவதாகவும் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.