சேலம் மாவட்டம், திருவாக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மக்கள் ஆர்த்தி (26). இவருக்கு கடந்த 2011ஆம் ஆண்டு கண்ணன் என்பவரோடு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்து வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு கண்ணன் உயிரிழந்தார்.
இதனையடுத்து, ஆர்த்தி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டு தனது இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த அமெரிக்கா வாழ் இந்தியரான பொறியாளர் பாஸ்கர் என்பவரை ஆர்த்தி 2வது இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தம்பதியினர் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் (10-02-24) இரவு ஆர்த்தியும், பாஸ்கர் மற்றும் அவர்களது இரு குழந்தைகளும் சீலநாயக்கன்பட்டி சாலையில் தங்களது காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது தம்பதியினர் இருவருக்கும் ஏற்பட்ட தகராற்றால் மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளை கீழே இறக்கிவிட்டு பாஸ்கர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நேற்று மதியம் சேலம் முள்ளுவாடி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் பாஸ்கர் இருப்பதை தெரிந்து கொண்ட ஆர்த்தி, தனது உறவினர்களுடன் அந்த விடுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு, பாஸ்கருக்கும், ஆர்த்தியின் உறவினர் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சேலம் டவுன் போலீசாருக்கு ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பாஸ்கர் இது குறித்து புகார் கொடுத்தார். அதன் பேரில், அங்கு வந்த போலீசார், தங்கும் விடுதியில் இருந்து பாஸ்கரை மீட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அப்போது ஆர்த்தி, போலீஸ் வாகனத்தின் முன் அமர்ந்து தர்ணா போராட்டம் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, தர்ணா போராட்டம் நடத்திய ஆர்த்தியை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தி வாகனத்தை அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து ஆர்த்தி, பாஸ்கர் மீது சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், 'அமெரிக்கா வாழ் இந்தியரான பாஸ்கர், தன்னை 40 வயது எனக் கூறி என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். மேலும், திருமணம் செய்யும் போது தன்னையும், குழந்தைகளையும் நன்றாக பார்த்துக் கொள்வதாகவும், அமெரிக்காவிற்கு அழைத்து செல்வதாகவும் கூறினார். ஆனால், என்னை மிகவும் அடித்து துன்புறுத்தி வருகிறார். மேலும், தன்னையும், குழந்தைகளையும், கொன்று விடுவதாக மிரட்டி அடித்து துன்புறுத்தி காரில் இருந்து தள்ளிவிட்டு பாஸ்கர் சென்றுவிட்டார். அதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
மனைவியை அடித்து துன்புறுத்திக் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படும் அமெரிக்கா வாழ் இந்தியரான பாஸ்கர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.