ஈரோட்டின் எல்லையான கருங்கல் பாளையத்தையடுத்து காவிரி ஆறு ஒடுகிறது.நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை இணைக்கும் முக்கிய பாலமாக காவிரி ஆற்றின் மீது இரண்டு பாலங்கள் உள்ளன. ஒன்று சிறிய பாலம்.மற்றொன்று புதிய பாலம். புதிய பாலம் பழைய பாலத்தை விட சற்று உயரம் பெரியதாக இருக்கும். இந்த பாலம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. சமீபகாலமாக இந்த காவிரி ஆற்றுப் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்யும் சம்பவங்கள் சில நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் உள்ள போலீசார் காவிரி ஆற்று பாலத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் 18 ந் தேதி காலை 11 மணி அளவில் பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்தின் மேல் ஏறி சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆற்றில் குதித்தார். அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி டிரைவர் அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஈரோடு டவுன் டி.எஸ்.பி. அனந்தகுமார் மற்றும் போலீசாரிடம் விபரத்தை தெரிவித்தார். அதேசமயம் அந்தப் பெண் காவிரி ஆற்று நீரில் தத்தளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது காவிரி ஆற்றில் பரிசலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்த தனபால், அவரது மனைவி வடிவரசி ஆகிய இருவரும் அந்தப் பெண்ணை நோக்கி வேகமாக பரிசல் ஓட்டினார்கள். காவிரி ஆற்றில் தத்தளித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த பெண்ணை நீரிலிருந்து மீட்டு தங்களது பரிசலில் ஏற்றி வேகமாக கரைக்கு கொண்டு வந்தனர். அங்கு இருந்த டவுன் டி.எஸ்.பி. அனந்தகுமார் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
போலீஸ் விசாரணையில் தற்கொலைக்கு முயன்ற பெண் திருச்செங்கோடு, மாங்கொட்டை பாளையம் பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. குடும்ப பிரச்சனை காரணமாக அவர் விபரீத முடிவு எடுத்து காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. மீட்கப்பட்ட அவர் தற்போது நல்ல நிலையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து அவரின் கணவர் சங்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பெண்ணின் உயிரை காப்பாற்றிய பரிசல் ஓட்டிகளான தனபால் மற்றும் அவரது மனைவி வடிவரசியை போலீசார் பாராட்டினார்கள்.