தாம்பரம் அருகே சேலையூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் நளினி (55). இவர் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது மகன் ரானக்ஸ் (16) என்பவருடன் அந்தப் பகுதியில் வசித்து வருகிறார். இவர் பணிபுரியும் இடத்திற்குத் தினமும் தாம்பரம் ரயில் நிலையத்துக்குச் சென்று அங்கு வருகிற மின்சார ரயில் மூலமாகத் தான் செல்வார். அப்படி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, இவர் மின்சார ரயிலில் பயணம் செய்தபோது, பவித்ரா(21) என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். மின்சார ரயில் பயணத்தில் தினமும் பேசி வந்த இவர்களுக்குள் நாளடைவில் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த நட்பின்பால், நளினியின் செல்போன் எண்ணை வாங்கிய பவித்ரா, தினமும் செல்போனில் நளினியுடன் பேசி வந்துள்ளார். மேலும், நளினியின் வீட்டு முகவரி உள்ளிட்ட விபரங்களையும் பவித்ரா கேட்டு வாங்கியுள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நளினியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட பின், நளினியின் வீட்டிற்கு பவித்ரா சென்றுள்ளார். அங்கு சென்ற பவித்ரா நளினியிடம், தனக்குத் துணையாக யாரும் இல்லை. அதனால், ஏதாவது வேலை வாங்கித் தர வேண்டும். மேலும், ஒருநாள் மட்டும் நளினியின் வீட்டில் தங்கிக் கொள்வதாகக் கெஞ்சி கேட்டுள்ளார். அவரின் பேச்சை நம்பிய நளினி, பவித்ராவை தனது வீட்டில் தங்குமாறு அனுமதி கொடுத்துள்ளார். அதன் பின்னர், நளினி கழிவறைக்குச் சென்ற நேரத்தில், கழிவறைக் கதவை வெளியே பூட்டிய பவித்ரா, வீட்டிலிருந்த செல்போனை திருடிக் கொண்டு அந்த இடத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, கழிவறையின் கதவை வெளியே பூட்டி இருப்பதை உணர்ந்த நளினி, கழிவறையின் கதவைத் தட்டியுள்ளார். இந்த சத்தத்தைக் கேட்டு, பக்கத்து அறையில் இருந்த நளினியின் மகன் வந்து கதவைத் திறந்துள்ளார். அதன் பின்னர், நளினி வெளியே வந்து பார்த்தபோது, வீட்டிலிருந்த பவித்ரா தனது செல்போனுடன் மாயமானது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த நளினி அருகில் இருக்கும் சேலையூர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், செல்போனை திருடிவிட்டுத் தப்பிச்சென்ற பவித்ராவை பிடிப்பதற்கு, தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.