விழுப்புரம் மாவட்டம், திருவக்கரைப் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகள் 13 வயது சிறுமி. இவர், அங்குள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 22ஆம் தேதி அச்சிறுமி, கடைத்தெருவுக்கு சென்றுவிட்டு தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற அதே பகுதியைச் சேர்ந்த வேன் டிரைவர் பாண்டியன் மாணவியை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரிடம் இருந்து தப்பிய மாணவி வீட்டிற்கு ஓடி வந்துள்ளார்.
வந்தவுடன் தனது தாயிடம் சம்பவத்தை பற்றி கூறியுள்ளார். அவர் உடனடியாக சிறுமியை அழைத்துக்கொண்டு கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று இதுகுறித்து புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து விசாரணை செய்து இன்ஸ்பெக்டர் ரேவதி, வழக்குப்பதிவு செய்து பாண்டியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் நடந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத மாணவி, பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்துள்ளார். அவரது பெற்றோர் அவருக்கு ஆறுதல் கூறி உள்ளனர். இருந்தும் நேற்று மதியம் தந்தையின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வேகமாக வீட்டைவிட்டு மாணவி சென்றுள்ளார். அதைப்பார்த்து பதட்டம் அடைந்த அவரது பெற்றோர், அவரைப் பின்தொடர்ந்து சென்றனர். அதற்குள் அப்பகுதியில் உள்ள ஒரு கல்குவாரி குட்டை அருகில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கல்குவாரி பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்தொடர்ந்து சென்ற அவரது தாய், தந்தை அதனைப் பார்த்து கதறி அழுது கூச்சலிட்டனர். அப்பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து மாணவியின் உடலை கல்குவாரி பள்ளத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.
இது குறித்த தகவல் வானூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து மாணவியின் தந்தை மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.