திருப்பூர் மாவட்டம், அவினாசி பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவருடைய மகள் சத்தியஸ்ரீ (21). இவர் திருப்பூர் 60 அடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். இவரும், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த நரேந்திரன் (21) என்பவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சத்தியஸ்ரீ வழக்கம்போல் தான் பணியாற்றி வந்த மருத்துவமனைக்கு வந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த நரேந்திரன், சத்தியஸ்ரீயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றிப்போகவே ஆத்திரமடைந்த நரேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து சத்தியஸ்ரீயின் வயிற்றில் குத்தியுள்ளார். மேலும், அவர் சத்தியஸ்ரீயின் கழுத்தையும் அறுத்துள்ளார். இதில் சத்தியஸ்ரீ படுகாயமடைந்து மயங்கிய நிலையில் கீழே விழுந்துள்ளார். அதன் பின்னர், நரேந்திரன் அந்த கத்தியை வைத்து தன்னுடைய கழுத்தையும் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால், அங்கு பதட்டம் ஏற்பட்டது.
இதுகுறித்து, மருத்துவமனை ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த அந்த தகவலின் பேரில் திருப்பூர் வடக்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சத்தியஸ்ரீயை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். மேலும், நரேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், சத்தியஸ்ரீக்கும், நரேந்திரனுக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு இவர்களுக்குள் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பேச்சு வார்த்தை நடத்துவதற்காக நரேந்திரன், சத்தியஸ்ரீ பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு, தான் வைத்திருந்த கத்தியை வைத்து சத்தியஸ்ரீயை குத்தி விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்று காவல்துறையினருக்கு தெரியவந்தது.