
திண்டுக்கல் மேற்கு மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை ஆலோசனைக் கூட்டம் கள்ளிமந்தையம் தனியார் திருமண மண்டபத்தில் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு இளைஞர் அணியினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் பேரூர் கழக செயலாளர்கள் உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, ''இளைஞர் அணியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு போக வேண்டும். வருகிற 25-ம் தேதி திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டத்தை தொடங்கி வைக்க உதயநிதி ஸ்டாலின் வர இருக்கிறார். இதில் இளைஞர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். அதோடு இளம் ரத்தங்களை ஊக்குவிக்கும் அளவுக்கு இல்லம் தேடிச் சென்று புதிய இளைஞர்களை இளைஞர் அணியில் சேர்த்து வலுப்படுத்த வேண்டும். அதற்காக உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் நான் செய்ய தயாராக இருக்கிறேன்'' என்று கூறினார்.