ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தில் விலங்குகளைத் துன்புறுத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் பகுதியைச் சேர்ந்த புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் நிர்வாகி முத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் அரசின் நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்வதாகவும், அதைத் தடுக்கக் கோரி அதிகாரிகளுக்கு அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், எனவே எருமை மாட்டிடம் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஸ்குமார், ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தில், விலங்குகளைத் துன்புறுத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார். எருமை மாட்டை காலை முதல் மாலை வரை நிற்க வைத்து போராட்டம் நடத்துவது, மிருகவதைச் சட்டத்தை மீறிய செயல் என்றும் நீதிபதி தெரிவித்தார்.