நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி எழும்பூர் டாணா தெரு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''தயாநிதி மாறனை உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற வாக்கு கேட்பதற்கு இங்கே வந்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது என்னைவிட அதிக ஆர்வத்தோடு, எழுச்சியோடு அவரை வெற்றி பெறச் செய்வதில் நீங்கள் முனைப்போடு இருக்கிறீர்கள் என்பது. நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு. கடந்த 2019 தேர்தலில் தயாநிதிமாறனை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். அதற்கு நான் பலமுறை நன்றி தெரிவித்திருக்கிறேன். நான் இந்த பகுதிக்கு வருவது இது முதல் தடவையோ, இரண்டாவது தடவையோ அல்ல. இந்த மூன்று வருடத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட முறை குறையாமல் இங்கே வந்திருக்கிறேன் கொரோனா காலத்திலும் சரி, மழை வெள்ள காலத்திலும் சரி அனைத்து பிரச்சனையின் போதும் இங்கே வந்திருக்கிறேன்.
அந்த உரிமையோடு கேட்கிறேன் குறைந்தது 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தயாநிதிமாறனை வெற்றி பெற வைக்க வேண்டும். எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் டெபாசிட் பெறக்கூடாது. நான் கலைஞர் பேரன் சொன்னதை கண்டிப்பாக செய்வேன். நீங்களும் நிறைவேற்ற வேண்டும். வேட்பாளரும் கலைஞர் பேரன் தான். கலைஞர் பேரனுக்கு கலைஞர் பேரன் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். இங்கு இருக்கும் அத்தனை பேரும் கலைஞரின் பேரன்கள் தான். நீங்கள் அத்தனை பேரும் பெரியாரின் பேரன்கள் தான், நீங்கள் அத்தனை பேரும் அண்ணாவின் பேரன்கள் தான். நாம் அனைவரும் கொள்கை பேரன்கள், லட்சிய பேரன்கள்'' என்றார்.