திமுகவின் மாதிரி சட்டப்பேரவை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற கருணாஸ் எம்.எல்.ஏ பங்கேற்றார்.
அதிமுக ஆட்சியில் படுகொலையாகும் மக்கள், பறிபோகும் ஜனநாயகம் என்ற பொருளில் மாதிரி சட்டமன்றக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் பேசிய கருணாஸ்,
நேற்றைய சட்டமன்றத்தில், போராடக்கூடிய மக்களை துப்பாக்கி கொண்டு கூறி பார்த்து நடத்திய படுகொலையை நடத்தியது யார்? அதற்கு உத்தரவிட்டது யார்? என்பது தான் அனைவரின் கேள்வியும். ஆம்.. நான் இரட்டை இலையில் நின்று வெற்றி பெற்றவன்தான் அதற்கு? தவறு என்கிற பட்சத்தில் மக்களால் வாக்களிக்கப்பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்கிற அடிப்படை உரிமையில் பேசுவதற்கு அனுமதி கோரினேன்.
தமிழகத்தை உளுக்கிய அந்த துப்பாக்கிச்சூட்டை ஒரு உதவி வட்டாட்சியாளர் அனுமதி அளித்தார் என்பது எந்த அளவுக்கு கேலிக்கூத்தாக உள்ளது. அதை நான் தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துக்கொள்கிறேன் என்று ஒரு முதல்வர் சொல்லும் பதில். இது நிர்வாக சீர்கேட்டின் அடையாளம் அல்லவா? போராட்டத்தில் உயிரிழந்த அந்த 13 தியாகிகளுக்கு இந்த அவையில் அஞ்சலி செலுத்தினோமே, இந்த ஒரு அடிப்படை நாகரீகம் அந்த அவைக்கு தெரியவில்லையே.
இதுவரை 192 மனுக்களை தொகுதி சார்பாக கொடுத்துள்ளேன். ஆனால் 2 மனுக்கள் தான் பரிசீலிக்கப்பட்டுள்ளது. தொகுதிக்கு செல்ல முடியவில்லை. நான் எடப்பாடி பழனிசாமி அல்ல. நான் கருணாஸ்.. மக்களுக்கான பணியை என்னால் தெளிவாக செய்ய முடியவில்லை என்றால் அந்த பதவி எதற்கு? ஜெயலலிதா என்னை பேரவையில் கச்சேரி பாட கூட அனுமதித்தார். ஆனால் நேற்று மக்கள் பிரச்னை குறித்து பேச அனுமதிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.