தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது காரணமாக, அரசு மருத்துவர் இடமாற்றம் செய்யப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு மறு சிகிச்சை அளிக்கவும் காப்பீடு திட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி பக்கமுள்ள இலுப்பையூரணி கிராமத்தைச் சேர்ந்த குருவம்மாள் (வயது 67). இவரது கணவர் மணிமுருககுமார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே காலமாகிவிட்டார். எனவே தனியாக வசித்துவரும் குருவம்மாள், பெற்ற மகன்களை எதிர்பாராமல் அருகிலுள்ள லிங்கம்பட்டி கல்குவாரியில் வேலை செய்து தன் ஜீவனத்தை நடத்தி வந்திருக்கிறார்.
இதனிடையே குருவம்மாளுக்கு வலது காலில் அடிக்கடி வலி ஏற்பட்டதால், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சையின் பொருட்டு மார்ச் 22 அன்று சேர்ந்தவருக்கு ஏப்ரல் 4 அன்று மருத்துவர் சீனிவாசன் தலைமையிலான டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால் மூதாட்டிக்கு வலி உண்டான வலது காலுக்கு பதிலாக வலியே இல்லாத இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததாம்.
அறுவைசிகிச்சை முடிந்து மயக்க நிலையிலிருந்த அவரை பொதுப் பிரிவுக்கு மாற்றினர். மயக்கம் தெளிந்த பின்னரே வலியுள்ள வலது காலுக்குப் பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை உணர்ந்து அதிர்ந்த மூதாட்டி மருத்துவர் சீனிவாசனிடம் கேட்டிருக்கிறார். இடது காலில் கட்டி இருந்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவர் கூறியுள்ளார்.
ஆனால் தனக்கு இடது காலில் கட்டியே இல்லை என்று தெரிவித்த மூதாட்டியிடம் வலது காலில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்வதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு மறுத்த மூதாட்டி அறுவை சிகிச்சை வேண்டாம். சிகிச்சை மட்டுமே அளியுங்கள் என்று சொல்லிவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் முருகவேல் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்தவர் மூதாட்டி குருவம்மாள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் குழுவினர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். பின்னர் மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சீனிவாசன் ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.
முதற்கட்டமாக மூதாட்டிக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. மருத்துவர் சீனிவாசன் ஓட்டப்பிடாரம் ஜி.எச். மாற்றப்பட்டிருக்கிறார். பின்னர் அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் முருகவேல்.
மூதாட்டிக்குக் கால் மாற்றி நடத்தப்பட்ட அறுவைசிகிச்சை மருத்துவ வட்டாரங்களைப் பரபரப்பாக்கியிருக்கிறது.