தன் பேரன் கடற்கரைப் பாண்டியைக் கொன்ற வழக்கில் கைதாகியிருக்கிறார் ராஜபாளையத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி கனகமணி. இந்த வயதில், கொலை செய்யும் அளவுக்கு அப்படி என்ன ஆத்திரம்? ஏடாகூட சமாச்சாரங்களே கொலைக்கான பின்னணியாக உள்ளது.
ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் சரோஜா. இவருடைய மகன் கடற்கரைப்பாண்டி அந்த ஏரியாவில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தான். சரோஜாவின் தங்கையும், கடற்கரைப்பாண்டியின் சித்தியுமான பிரியா அந்தப் பகுதியில் பாலியல் தொழில் செய்து வந்தாள். ராஜபாளையம் தெற்கு காவல்நிலையத்தில் பிரியா மீது மூன்று வழக்குகள் உள்ளன. சித்தி பிரியாவின் தகாத நடவடிக்கையைக் கண்டித்த கடற்கரைப்பாண்டி, தொடர்ந்து பிரச்சனை செய்து வந்தான். இந்தநிலையில், கடந்த 16-ஆம் தேதி பிரியா தூக்கில் தொங்க, தற்கொலைதான் என்று கருதிய குடும்பத்தினர், காவல்நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்கவில்லை.
ஒருநாள் கடற்கரைப்பாண்டி போதையில் தன் அம்மா சரோஜாவிடம் “சித்தியை நான்தான் கொன்று தூக்கில் தொங்கவிட்டேன்.” என்று உளறியிருக்கிறான். இந்த விஷயம், இறந்துபோன பிரியாவின் மகள் வின்சிலாவுக்குத் தெரிந்துவிட, பாட்டி சரோஜாவிடம் “உன் மகனை நீயே விஷம் வைத்துக் கொன்றுவிடு.” என்று நச்சரித்திருக்கிறாள். தன் மகனைக் கொல்வதற்கு சரோஜா சம்மதிக்கவில்லை.
கெட்டவளானாலும் பெற்றவளாயிற்றே! வின்சிலாவுக்கு ஆத்திரம் அதிகமாகிக்கொண்டே போனது. தன் தாய் மாமா செல்வத்தின் உதவியுடன் கடற்கரைப் பாண்டியைக் கொலை செய்வதற்கு ஆயத்தமானாள். இந்தத் திட்டத்துக்கு, பாட்டி கனகமணி, பெரியம்மா செல்வி, சித்தி ஆஞ்சலா சகாயராணியும் உடன்பட்டிருக்கின்றனர். துணைக்கு இன்னொரு ஆணும் இருந்தால் கொலையைக் கச்சிதமாகப் பண்ணிவிடலாம் என்ற நோக்கத்தோடு, பெரியம்மா செல்வியின் கள்ளக்காதலன் மாரியப்பனையும் தயார்ப்படுத்திவிட்டு, கொலை செய்வதற்கு நாள் குறித்தனர். இறந்த பிரியாவுக்கு 30-ஆம் நாள் விசேஷம் வைத்தனர். கடற்கரைப்பாண்டியும் வந்து கலந்துகொண்டான். அன்றிரவு, சரோஜாவுடன் மற்ற பெண்களும், பாட்டி கனகமணியின் வீட்டுக்கு தூங்கச் சென்றனர். இந்த நேரத்தில், செல்வமும் மாரியப்பனும் கடற்கரைப்பாண்டியைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்து, வின்சிலாவின் டூ வீலரில் பிணத்தை எடுத்துச்சென்று, பக்கத்தில் உள்ள புதிய தாதிக்கண்மாயில் வீசிவிட்டு திரும்பினர்.
விடிந்ததும் மகன் கடற்கரைப்பாண்டியைத் தேடினார் சரோஜா. கண்மாயில் பிணமாகக் கிடப்பதைப் பார்த்துக் கதறினார். ராஜபாளையம் தெற்கு காவல்நிலையத்தில் புகார் தந்தார். போலீசார் விசாரித்தபோது, பிரியாவின் விசேஷத்துக்கு சம்பந்தமே இல்லாமல் செல்வியின் கள்ளக்காதலன் மாரியப்பன் வந்தது உறுத்தியிருக்கிறது. விசாரணையில் கடுமை காட்டியவுடன், திட்டம் தீட்டியதையும் கொலை செய்ததையும் ஒத்துக்கொண்ட மாரியப்பன், அனைவரையும் காட்டிக்கொடுத்தான். பிறகு, 'நாங்கள் அனைவரும் சேர்ந்துதான் கடற்கரைப்பாண்டியைத் தீர்த்துக்கட்டினோம்’ என்று கனகமணி உள்ளிட்ட உறவினர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்.
ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி திட்டம் தீட்டுதல், சதித்திட்டம் தீட்டிக் கொலை செய்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ், கொலையான கடற்கரைப்பாண்டியின் பாட்டி கனகமணி, பெரியம்மா செல்வி, சித்தி ஆஞ்சலா சகாயராணி, அக்கா வின்சிலா, தாய்மாமன் செல்வம் மற்றும் பெரியம்மாவின் கள்ளக்காதலன் மாரியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
வழி தவறிய வாழ்க்கையால், பிரியாவும், கடற்கரைப்பாண்டியும் கொல்லப்பட்டிருக்கின்றனர். உறவினர்களோ, சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.