
தஞ்சையின் வண்டல் மண் மணக்க எழுதிவந்த இடதுசாரி எழுத்தாளரான சோலை சுந்தரபெருமாள் நேற்று ( ஜனவரி 12) மதியம் 12 மணியளவில், உடல்நலக் குறைவால் உறக்கத்திலேயே மரணத்தைத் தழுவினார். அவரது மரணச் செய்தி, தமிழ் இலக்கிய உலகையும் படைப்பாளர்களையும், என்னைப் போன்ற அவரது நீண்டகால நண்பர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. டெல்டா மாவட்டங்களின் இதயத் துடிப்பை எழுத்தால் எதிரொலித்துக்கொண்டிருந்த அந்த முற்போக்கு இதயம், கனத்த மெளனத்திற்குள் மூழ்கிவிட்டது.
அவரது மறைவு குறித்துத் தன் உணர்வைப் பகிர்ந்துகொண்ட தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்ற பொதுச்செயலாளரான முனைவர் இரா.காமராசு “இப்போது கொட்டும் மழையிலும் தோழர்களுடன் சென்று அழுது தீர்த்தேன். வெண்மணி தணலின் உக்கிரம் உணர்த்திய ‘செந்நெல்’, ஒரு இலக்கியக் கணக்குத் தீர்ப்பு. தஞ்சையின் மாற்றுக் களத்தை, அசல் முகத்தை தன் எழுத்துக்கள் வாயிலாக முன்வைத்தவர் அவர். வாய்மொழி மரபைப் படைப்பு மொழியாக்கியவர். உழைக்கும் மக்களை தன் எழுத்தில் வார்த்தவர். கரிசல் போல வண்டல் என வைராக்கியத்தோடு போராடியவர். கைத்தொழில் ஆசிரியராய்த் தொடங்கி, தமிழாசிரியராக உயர்ந்து, எழுத்தாளராக மிளிர்ந்தவர். கடும் உழைப்பாளி. அகத்திலும் புறத்திலும் கடைசிவரைப் போராடியவர். எளிமையும் பேரன்பும் மிக்கவர். தோழர் தனுஷ்கோடி ராமசாமியும், அவரும், நானும் தஞ்சை, ஆரூர், மன்னை எனப் பல இரவுகள் பேசிக் கழித்த நினைவுகள்... எழுத ஏராளம். மனம் துயரில் விம்முகிறது” என்று எழுத்தால் கண்ணீர் கசிந்திருக்கிறார். இவரைப் போலவே, சோலை சுந்தரபெருமாளோடு பழகிய படைப்பாளர்கள் பலரும் அவரது மறைவால் கலங்கிப்போயிருக்கிறார்கள்.
திருவாரூர் அருகே உள்ள காவனூர் கிராமத்தில் வசித்துவந்த சோலை, அம்மையப்பன் பள்ளியில் ஆசியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆரம்பக் காலங்களில் கவிதைகளை அதிகமாய் எழுதிவந்த சோலை, ‘பொன்னியின் காதலன்’, ‘தெற்கே ஓர் இமயம்’ உள்ளிட்ட கவிதை நூல்களையும் எழுதியிருக்கிறார். சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள் என்று படைப்பிலக்கியத்தில் தனது பாய்ச்சலைக் காட்டத்தொடங்கிய சோலைக்கு, திருவாரூரின் இலக்கியச் சூழல், ஆரம்பகால உந்து சக்தியாக இருந்தது என்று சொல்லலாம். அந்தக் காலகட்டத்தில் அங்கே கவிஞர்களும் கதைப் படைப்பாளர்களும் பெரிதும் இயங்கத் தொடங்கியிருந்தனர்.

அப்போது தீயணைப்புத் துறையில் பணியாற்றிவந்த என் நெருங்கிய நண்பரான ஜெயராமன், ராஜகுரு என்ற பெயரில், ‘தீபம்’ நா.பா. பாணியிலான உணர்ச்சிகள், போராட்டங்கள், காதலாகிக் கரைந்து ஆகிய தனது செம்மையான புதினங்களை எழுதி வெளியிடத் தொடங்கினார். குடந்தையில் இருந்து திருவாரூருக்கு இடம்பெயர்ந்த எழுத்தாளர் வினோதானந்த்தும், அப்போது நூற்றுக்கணக்கான பொழுதுபோக்குச் சிறுகதைகளைப் பிரபல இதழ்களில் எழுதிக் குவித்து வந்தார். அந்த காலகட்டத்தில் ‘தாமரை’ உள்ளிட்ட இதழ்களில் சிறுகதைகளை எழுதத் தொடங்கிய சோலை சுந்தரபெருமாள், ‘நீரில் அழும் மீன்கள்’, ‘ஓ செவ்வந்தி’, ‘மரத்தைத் தாங்கும் கிளைகள்’, ‘கலியுகக் குற்றங்கள்’, ‘நெறியைத் தொடாத நியாயங்கள்’ என்று தனது புதினங்களை மலிவு விலையில் அச்சிட்டு, திருவாரூர் பகுதியில் வெளியிடத் தொடங்கினார். அவை தஞ்சை வட்டார நடைப் படைப்புகளாக அமைந்திருந்தன.
ராஜகுருவோ, ‘கலைமகள்’, ‘கல்கி’, ‘அமுதசுரபி’ உள்ளிட்ட இதழ்கள் நடத்திய சிறுகதை, குறும் புதினம் மற்றும் புதினப் போட்டிகளில் பரிசுகளைக் குவித்துவந்தார். இன்னொரு புறம் திருத்துறைப்பூண்டி பக்கம் இருந்து, துணை வட்டாட்சியராக இருந்த செல்வராஜ், வீரியம் மிகுந்த படைப்பாளராக ‘உத்தமசோழன்’ என்ற பெயரில் வெளியே வந்தார். இதற்கிடையே, ராஜகுரு, வரலாற்றின் திசையில் திரும்பி, ‘சோழனின் காதலி’, ‘சோழ ராணி’, ‘மாமன்னன் உலா’ உள்ளிட்ட புதினங்களைப் படைத்துப் புகழ்பெற தொடங்கிய நிலையிலேயே, பணிச்சுமை காரணமாக அவர் கொஞ்சம் கொஞ்சமாக எழுதுவதையே நிறுத்திவிட்டார். இப்படி திருவாரூர் பகுதியில் இருந்து படைப்புகளை எழுதிக் குவித்த வளமான எழுத்தாளர்களின் வளர்ச்சி நிலையைக் கண்கூடாகக் காணும் அனுபவம் எனக்கு வாய்த்தது.
இந்தச் சூழலில் சோலை சுந்தரபெருமாளின் எழுத்து, இடதுசாரித்துவ எழுத்தாக மாறி, தஞ்சை விவசாய தொழிலாளிகளின் வாழ்வையும் வலியையும் பேசத் தொடங்கின. அவர் சித்தாந்தத்தின் அடிப்படையில் இயங்கத் தொடங்கியதால், விரைவிலேயே பெரும் கவன ஈர்ப்புக்கு ஆளானார். வண்டல் உள்ளிட்ட அவரது ஒவ்வொரு படைப்பும், விவசாயக் கூலிகளின் வாழ்வையும் வலியையும் பேசுவதாக அமைந்தது. குறிப்பாக, 68-ல் நாகை மாவட்டம் கீழவெண்மணியில் அரங்கேற்றப்பட்ட கொடூர சம்பவத்தை மையமாக வைத்து இவர் எழுதிய ‘செந்நெல்’ என்ற புதினம், இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கூலி கேட்டுப் போராடிய விவசாயத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தை அப்பட்டமாகப் படம் பிடித்த அந்த புதினம், ஆங்கிலம், மலையாளம் என மொழிபெயர்க்கப்பட்டு பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. அந்தச் சம்பவத்தில் உயிரோடு எரிக்கப்பட்ட அந்த 44 பேரின் சடலத்தையும், தான் நேரில் பார்க்க நேர்ந்ததன் தாக்கம்தான், அப்படியொரு நாவலை எழுதத் தூண்டியது என்று சோலை பலமுறை குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல் ‘வாய்மொழி வரலாறு’ என்ற தலைப்பில் வெண்மணி பகுதி மக்களின் அனுபவ வலி நிறைந்த வாக்குமூலங்களையும் தொகுத்துத் தந்து, ஏகாதிபத்தியத்தின் கொடூர முகத்திரையைக் கிழித்தெறிந்தார் சோலை.
அவர் எழுதிய அத்தனை கதைகளிலும் உண்மையின் குரல் ஓங்கி ஒலித்தது. அதனால் எதிர்விளைவுகளையும் அவர் சந்திக்க நேர்ந்தது. சுந்தரரின் கதையைப் பேசிய அவரது ‘தாண்டவபுரம்’ புதினத்தை இந்துத்துவவாதிகள் கடுமையாக எதிர்த்து அவரை மிரட்டியபோதும், அவரது எழுதுகோல் நடுங்கியதில்லை.
சோலையின் புதினங்களில், ‘செந்நெல்’, ‘தப்பாட்டம்’, ‘பெருந்திணை’, ‘மரக்கால்’, ‘பால்கட்டு’, ‘நஞ்சை மனிதர்கள்’, ‘எல்லைப்பிடாரி’ உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. அதேபோல் இவருடைய, ‘மடையான்களும் சில காடைகளும்’, ‘வெள்ளாடுகளும் சில கொடியாடுகளும்’, ‘கப்பல்காரர் வீடு’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுதிகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. ‘தமிழ் மண்ணில் திருமணம்’, ‘மருதநிலமும் சில பட்டாம் பூச்சிகளும்’ உள்ளிட்ட கட்டுரை நூல்களையும் அவர் எழுதியிருக்கிறார்.
தனது படைப்புகளுக்காக பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் சோலை பெற்றிருக்கிறார். எனினும், சேறும் சகதியும் படிந்த இவரது எழுத்துக்களை, சாகித்ய அகடமி உள்ளிட்ட அமைப்புகள் இதுவரை கண்டுகொள்ளவில்லை என்பது வருந்தத்தக்கது. கலை இலக்கியப் பெருமன்றத்தையும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தையும் சார்ந்து தொடர்ந்து இயங்கிவந்த சோலை சுந்தரபெருமாள், அடித்தட்டு விவசாயிக் கூலிகளுக்கான ஆயுதமாக தனது எழுதுகோலை மாற்றிகொண்டவர். இலக்கியப் போராளி சோலை சுந்தரபெருமாளின் படைப்புகள், ஒடுக்கப்பட்டவர்களுக்கான களப்போரில் எப்போதும் தலைநிமிர்ந்து நிற்கும்.