உலக வெறிநோய்த் தடுப்பு தினத்தை (28.09.2020) முன்னிட்டு கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள கால்நடை மருத்துவத்துறை அலுவலகத்தில் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி துவக்கி வைத்தார்.
அப்போது மாவட்ட ஆட்சியர், "வெறிநோய் என்பது மனிதர்கள் மற்றும் கால்நடைகளை தாக்கக்கூடியது. இது மிகவும் அபாயகரமான நோயாகும். இந்த நோயானது அதிக அளவில் நாய்கள், வவ்வால்கள் மூலம் பரவும் ஒரு நச்சுயிரி. இந்த நோயினால் உலக அளவில் ஆண்டுதோறும் 50 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். இந்தியாவில் 20,000 பேர்களுக்கு மேல், இந்நோயினால் இறந்துள்ளனர் என்கிறது புள்ளிவிவரம். உலக அளவில் வெறிநோயினால் ஏற்படும் இறப்புகளில் 36% சதவீதம் நமது நாட்டில் ஏற்படுகிறது. இதில் 80 சதவீத இறப்புகள் கிராமப்புறங்களில் உள்ள 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. நம் நாட்டில் ஏற்படும் இந்த வெறிநோயானது 99 சதவிகிதம் நாய்கள் கடிப்பதனால் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் ஏற்படுகிறது. கடந்த 2018 - 2019 ஆண்டுகளில் மட்டும் 31-லிருந்து 43 பேர்கள் வரை இந்த வெறி நோயினால் இறந்துள்ளனர். இப்படிப்பட்ட வெறிநோயிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு வருடத்திற்கு ஒருமுறை இந்த வெறிநோய்க்கான தடுப்பூசி போடவேண்டும்" இவ்வாறு பேசினார்.
இதன் மூலம், விழிப்புணர்வு பெற்று தங்கள் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போடுவதில் அலட்சியம் காட்டக்கூடாது என்பதை உணரும்விதமாக, இந்த முகாம் அமைந்தது எனச் சொல்கிறார்கள், இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்கள்.