Skip to main content

"கடந்த 10 ஆண்டுகள் என்ன ஆட்சி நடத்தினார்கள் என கேட்கும் அளவிற்கான பணிகள் தான் நடைபெற்றுள்ளன" - அமைச்சர் மா.சு பேச்சு

Published on 06/10/2022 | Edited on 06/10/2022

 

"Works have been done to the extent of asking what the government has been doing for the last 10 years" - Minister M. Su's speech

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கார்மாங்குடி கிராமத்தில் ரூ 80 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட, புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட திறப்பு விழா கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீரா வரவேற்றார்.

 

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இருவரும்  ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினர்.

 

அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தேசிய நல வாழ்வு குழும நிதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சித்தா மருத்துவ பிரிவு கட்டிடம், காட்டுமன்னார்கோவில் வட்டம் செட்டித்தாங்கல் கிராமத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம், ரெட்டியூர் கிராமத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம், சிறுகாட்டூர் கிராமத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம், நத்தமலை கிராமத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம், முட்டம் கிராமத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில்  கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம், ராஜேந்திரசோழகன் கிராமத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம் உள்ளிட்ட ஆரம்ப துணை சுகாதார நிலையங்களையும் திறந்து வைத்தனர்.

 

நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "மருத்துவத்துறை வரலாற்றில் ஒரே மாவட்டத்தில், ஒரே நாளில் 11 புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்படுவது அநேகமாக கடலூரில் மட்டுமே நடந்திருக்கிற ஒரு சிறப்பான நிகழ்வு. இவ்வளவு கட்டிடங்கள் திறந்து வைத்த பிறகும் கூட இன்னும் 70-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 200-க்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்கள் கட்டிடங்கள் எல்லாம் சிதிலமடைந்து கிடக்கிறது. இந்த கட்டிடங்களை எல்லாம் சீரமைப்பதற்கு ஏற்கனவே சி.எஸ்.ஆர் நிதியுடன் முடிந்த அளவுக்கு செய்து கொண்டு இருந்தாலும், இந்த 15 வது நிதி ஆணையின் கீழ் இன்னமும் சரி செய்ய வேண்டிய கட்டிடங்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் பட்டியல் போட்டு காட்டினார். அப்படிஎன்றால் கடந்த 10 ஆண்டுகள் என்னதான் ஆட்சி நடத்தினார்கள் என்று கேட்கும் அளவிற்கான பணிகள் தான் இங்கு நடைபெற்றிருக்கிறது.

 

ஒரே மாவட்டத்தில் 19 கட்டிடங்களை கட்டியதற்கு பிறகும், இன்னமும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்களை கட்ட வேண்டி இருக்கிற இந்த சூழல் இந்த மாவட்டத்தில் இருக்கிறது என்றால், மருத்துவ கட்டமைப்பு கடந்த 10 ஆண்டுகளில் எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மத்திய ஆயுஷ் அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்ததனால் 100 சித்த மருத்துவமனை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் ஒரு சித்த மருத்துவமனை தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படுகின்ற இந்த மருத்துவமனைகள் 100 தமிழகத்தில் அமைய இருக்கின்றன" என்றார்.

 

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில் "கம்மாபுரம் ஒன்றியத்தில் இருந்து பிரித்து ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டுள்ள இப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு சுமார் 17 கிலோமீட்டர் தூரமுள்ள விருத்தாசலத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இப்பகுதியை ஸ்ரீமுஷ்ணம் பகுதியுடன் சேர்க்க கள்ளிப்பாடி - காவனூர் இடையே வெள்ளாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்படும். கீரமங்கலம் -தேவங்குடி இடையே சிறு பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும்" என்றார்.

 

இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 54 லட்சம் மதிப்பில் வேளாண்துறை மற்றும் மருத்துவ துறை மூலம் கர்ப்பிணி பெண்களுக்கான  பெட்டகம், விவசாயிகளுக்கான மருந்து தெளிப்பான், முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

 

முன்னதாக அப்பகுதியில் சுகாதாரத் துறை சார்பில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவும் முறை குறித்தும், தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கண்காட்சியை அமைச்சர்கள் பார்வையிட்டு, சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் நிறைகுறைகளை கேட்டறிந்தனர். விழாவில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்